தமிழ் மக்களின் காணிகளை காக்கத் தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதவி விலகவேண்டும்

447 0

------.-----------------------------------தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கத்தின் அபகரிப்பிலிருந்து தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கத்தைத் தலையிடவேண்டாமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“தமிழர் விடுதலைக் கூட்டணி எல்லா விடயங்களிலும் திடமான, நிதானமான கொள்கையையே பின்பற்றி வருகிறது. அத்துடன் பொதுமக்களின் உணர்வைத் தூண்டக்கூடிய அவர்களின் காணிகளை சுவீகரித்தல், அரச காணிகளை கையளித்தல் போன்றதும், நியாயமற்ற முறையில் கண்மூடித்தனமாக பொது மக்கள் மத்தியில் முகாம்கள் அமைப்பதிலும் அக்கொள்கையையே கடைபிடித்து வருகிறது.

இது சம்பந்தமாக வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு அமைப்புக்களால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுவரும் இவ்வேளையில் எமக்கு பெரும் அதிர்ச்சியை தரும் விடயம் யாதெனில் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் தனியாருக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரசு சுவீகரிப்பது மக்களின் ஆவேசத்தை தூண்டும் செயலாகும்.

நான் ஒருபோதும் எதனையும் இனதுவேசத்துடன் அணுகுபவன் அல்லன். ஆனால் அரசாங்கம் உள்நோக்கம் எதுவுமின்றி நல்லெண்ணத்துடன் முன்னெடுக்கும் செயல்களை வரவேற்று இருக்கின்றேன்.30 ஆண்டுகளாக பலவிதமான துன்பங்களை அனுபவித்து வந்த எமது நாடு இப்போதுதான் படிப்படியாக அமைதி திரும்புகின்ற இவ்வேளையில் நாட்டின் சில பகுதிகளில் நடப்பவை மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு இவ்வாறான செயல்களால் வடக்கு கிழக்கில் ஒரு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பல அவசியத் தேவைகளை புறந்தள்ளிவிட்டு இராணுவ முகாம்களை அமைப்பதற்கான அவசரம் என்ன? வடக்கே ஏதாவது இராணுவ முகாம்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா? அப்படியானால் நாடு அதனை அறியட்டும். அரசுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்க பெரும் பொறுப்புடன் முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இவ்வேளையில் அரசு சங்கடமான நிலைமையை உருவாக்குவது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. அரசுக்கு வழங்கியுள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டியளவுக்கு இச்சம்பவம் மிகப்பாரதூரமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரி.என்.ஏ என்ற சொற்பதத்தை கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சியே தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது. அக்கட்சி சட்டரீதியில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியல்ல. வடக்கு, கிழக்கில் மேலும் மேலும் இராணுவ முகாம்களை அமைக்கும் அரசின் செயற்பாட்டை தடுக்க முடியாது போனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கோருகிறேன்.

இச்செயல் அரசு தமது எதிர்ப்புக்களை பாரதூரமாக கருதவில்லை என்ற சிறுபான்மை மக்களின் பயத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த நாட்டின் சகல இன மக்களும் அரசாங்கத்தின் இச்செயற்பாடு முற்றுமுழுதாக ஆத்திரத்தை தூண்டுவதோடு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதென நியாயமாக சிந்திக்கின்ற பல இன மக்களும் எனது இக்கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

எப்போதும் எனது கருத்து முக்கியமான இடங்களில் இரண்டொரு முகாம்களை அமைத்து பொது மக்கள் வாழும் பகுதிகளை தவிர்த்து அவர்களை முகாம்களில் முடக்கி வைக்கப்பட வேண்டும் என்பதே. இப்போது பிரச்சினைக்குரிய காணியில் இராணுவத்தினரால் வேலி அமைக்கப்பட்டுக்கொண்டிருந்ததை பல நாள்களுக்கு முன்பு பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்ததை நான் அறிகிறேன். ஆனால் இது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக இப்போது அக்காணி இராணுவத்தினருக்காக அளவையாளரால் அளவிடப்பட இருக்கிறது. தற்போது எனக்கு தோன்றுவது யாதெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மட்டுமல்லாமல் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே” என்றுள்ளது.