சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் சிலை கடத்தல் வழக்கில் கடந்த ஜூன் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு கடந்த மாதம் 29-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தீனதயாளன் சர்வதேச நாடுகளுடன் தொடர்புடைய சிலை கடத்தல்காரர். அவரது வீடு மற்றும் குடோனில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பஞ்சலோக சிலைகள், 100 கிலோ முதல் 500 கிலோ எடையுள்ள 200-க்கும் மேற்பட்ட பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்துள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், ‘தீனதயாளன் மீதான வழக்குகளின் புலன் விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.