வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது

281 0
கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரு கிராமங்களின் மக்களினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.
பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்ததன் தொடர்ச்சியாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளாக கிராம மட்டத்திலும் கரைச்சி பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தமது கிராமங்களை உவர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கிராமங்களின் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
 மண்டைக்கல்லாறு வழியாக கடல் நீர் உட்புகுவதன் காரணமாக வன்னேரிக்குளத்தின் குஞ்சுக்குளம் கிராமம் முழுமையாக உவரடைந்து இக்கிராமத்தில் இருந்து ஐம்பதிற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்ததுடன் இக்கிராமத்தில் இயங்கிய குஞ்சுக்குளம் கணேசா வித்தியாலயம் மூடப்பட்டுள்ளது.
குஞ்சுக்குளம் வழியாக ஆனைவிழுந்தான் மேற்கு வரை பரவிய உவர் நீர் காரணமாக நன்னீர் கிணறுகள் எல்லாம் உவர் நீராக மாறி தென்னை, பலா போன்ற பயன்தரு மரங்கள் அழிவடைந்து வருகின்றன. குஞ்சுக்குளத்தின் அணைக்கட்டு இருப்பதன் காரணமாக வன்னேரிக்குள மகா வித்தியாலய சூழல் உவர் நீர் பரம்பல் தடுக்கப்பட்டுள்ள போதிலும் ஆனைவிழுந்தான் மேற்கில் பரவியுள்ள உவர் நீர் வன்னேரிக்குளத்தின் ஐயனார்புரம், இரண்டு ஏக்கர் ஆகிய பகுதிகளை உவர்ப் பரம்பல் ஏற்படக் கூடிய ஆபத்து உருவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பிரச்சனைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் ஆராயப்பட்ட விடயத்திற்கு இதுவரை அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மண்டைக்கல்லாறு வழியாக பரவும் உவர் நீரினைத் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இரு கிராமங்களும் முழுமையாக உவரடைந்து எதிர்காலத்தில் இக்கிராமங்களில் இருந்து ஆயிரம் வரையான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய அவலம் உருவாகும். 1953ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தில் தற்போது ஐந்நூறு வரையான குடும்பங்களும் 1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் ஐந்நூறு வரையான குடும்பங்களும் வாழ்கின்ற உவர்ப் பரம்பலினால் இரு கிராமங்களும்  முழுமையாக அழிவடைந்து விடும். 2000ம் ஆண்டில் பூநகரி பல்லவராயன்கட்டுக் கிராமம் உவர்ப் பரம்பல் ஏற்படுகின்றது என மக்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தமிழர்களின் பூர்வீக நிலமான பல்லவராயன்;கட்டுக் கிராமம் முழுமையாகத் தற்போது உவரடைந்து உள்ளது.

Leave a comment