சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க பொலீஸ் காவலரணை அமைக்க மக்கள் கோரிக்கை

254 0
கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு அக்கராயன் பகுதி பொது அமைப்புகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அக்கராயன் அணைக்கட்டு வைரவர் கோவில் அடியிலும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் பிள்ளையார் கோவில் அடியிலும் காவல் அரண்களை அமைப்பதன் மூலம் அக்கராயன் அணைக்கட்டு வீதி வழியாக திருமுறிகண்டி வீதி வழியாக வெளி இடங்களுக்கும், ஸ்கந்தபுரம் முக்கொம்பன் வீதி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு செல்லப்படும் மணலினைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கும் பொது அமைப்புகள்
அக்கராயன் பொலிசார் வழங்குகின்ற ஒத்துழைப்பின் அடிப்படையில்தான் மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கிளிநொச்சி அக்கராயனில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுடன் முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருப்பதன் காரணமாகவே மணல் சட்டவிரோமான முறையில் வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதிக்குக் கூட அக்கராயன் பொது அமைப்புகளினால் நேரடியாக மனுக் கையளிக்கப்பட்டும் அக்கராயனில் மணல் அகழ்வுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை எனவும் இதன் காரணமாக அக்கராயன் குளத்தின் கீழான விவசாய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரும் அழிவை எதிர்கொள்ளும் எனவும் அக்கராயன் குளத்தின் அணைக்கட்டில் இருந்து குறைந்தது மூன்று கிலோ மீற்றருக்கு அப்பால் மணல் அனுமதிகளை மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு வழங்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக அக்கராயன் பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையிலும் அக்கராயனில் இருந்து நாள்தோறும் டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுவதன் காரணமாக அக்கராயன் கிராமம் பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாக பொது அமைப்புகள் கவலைத் தெரிவிக்கின்றன.

Leave a comment