கோப்புகள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தெரிந்துதான் நடக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையேயான மோதல் வெடித்துள்ளது.
புதுவையில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தல் முடிவு வெளிவந்த உடனேயே புதுவைக்கு புதிய கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமனம் செய்யப்பட்டார். அவர் நியமனத்துக்கு பிறகுதான் புதுவையில் புதிய அரசு பதவி ஏற்றது. நாராயணசாமி முதல்-அமைச்சர் ஆனார்.
கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதுமே பல்வேறு அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். உடனடியாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வேலை வாங்கினார். அவராகவே பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்தார்.
பொதுவாக மற்ற மாநிலங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிக அதிகாரம் உண்டு. ஆனால், புதுவை மாநிலம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு கவர்னருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. இதை பயன்படுத்திதான் அவர் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வந்தார்.
தேர்ந்து எடுக்கப்பட்ட அமைச்சரவை இருக்கும் போது கவர்னர் தன்னிச்சையாக செயல்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. புதுவையில் இரட்டை அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, நாங்கள் இருவருமே புதுவை முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறோம். அவரவருக்கு உள்ள அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.
இந்த நிலையில் கவர்னர் தொடர்ந்து அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்துவதும், அவர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதுமாக இருந்தார்.
மேலும் அமைச்சர்களுக்கே தெரியாமல் அவர்கள் துறையில் உள்ளகோப்புகளை அதிகாரிகள் மூலமாக வரவழைத்து கவர்னர் பார்வையிட்டார். சமீபத்தில் கவர்னர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்தார். அப்போதும் புதுவை அமைச்சர்களுக்கு தெரியாமல் பல்வேறு கோப்புகளை அவர் எடுத்து சென்று மத்திய மந்திரிகளிடம் காண்பித்ததாக தெரிகிறது. இதனால் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் அதிருப்தியில் இருந்தனர்.
அதிகாரிகள் பலர் அமைச்சர்கள் சொல்வதை கூட கண்டுகொள்ளாமல் கவர்னர் உத்தரவை செயல்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். சில துறைகளில் அமைச்சர்களுக்கே தெரியாமல் கவர்னரின் உத்தரவின் பேரில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளம் மூலமாக கவர்னர் உத்ததரவு பிறப்பித்தார். அதை அதிகாரிகள் உடனடியாக பின்பற்றி தேவையானதை செய்தார்கள்.
இதுபற்றி அமைச்சர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் புகார் கூறினார்கள். அதிகாரிகள் எங்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள் என்றும், கவர்னருக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்கள் என்றும் கூறினார்கள்.
இதையடுத்து நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
அதில் பேசிய நாராயணசாமி, அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். புதுவை யூனியன் பிரதேசமாக இருந்தாலும் இந்த மாநிலத்துக்கென்று தனி அதிகாரங்கள் உள்ளன. அமைச்சரவை முடிவை கவர்னர் ஏற்க வேண்டும் என்று விதிகள் தெளிவாக உள்ளது. எனவே, அதிகாரிகள் அமைச்சர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அமைச்சர்களுக்கு தெரியாமல் எந்த கோப்புகளும் பைபாஸ் வழியாக கவர்னருக்கு செல்லக்கூடாது.
கவர்னர் வாட்ஸ்-அப் மூலம் உத்தரவிடுவது நடைமுறையில் இல்லாத ஒன்று. அது அங்கீகரிக்கப்பட்டதும் அல்ல. எனவே, இதை உத்தரவாக ஏற்று அதிகாரிகள் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தெரிந்துதான் நடக்க வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். மேலும் அதிகாரிகளுக்கு அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இதன் மூலம் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையேயான மோதல் வெடித்துள்ளது.
மற்றொரு யூனியன் பிரதேசமான டெல்லியில் ஏற்கனவே கவர்னர் நஜீப்ஜங்குக்கும், முதல்-அமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புதுவையிலும் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.