சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமிகள் ஜீவசமாதியடைந்த இடம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் பரதேசியாக வந்து தங்கி தன்யோக சக்தியால் பக்தர்களுக்கு அவர் அருளாசி வழங்கியுள்ளார். தீராத வியாதிகள் உள்ளவர்களும் குழந்தை இல்லாதவர்களும் அவரிடம் அருளாசி பெற்று வரம் பெற்றதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பரதேசி ஆறுமுகசாமிகள், ஆடி அமாவாசையன்று ஜீவசமாதியடைந்தார். அவர் கோட்டுப்பாக்கம் கிராமத்தில் சுயம்பு லிங்கமாய் அவதரித்துள்ளார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று அவரது குருபூஜை நடக்கிறது. அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி 180-ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.
இதனையொட்டி கடந்த 1-ந்தேதி கோவில் முன்பாக சன்மார்க்க சங்ககொடி ஏற்றும் நிகழ்ச்சியும், மதியம் கூழ்வார்க்கும் நிகழ்ச்சியும், மாலை தேவாரம் திருவருட்பா, திருப்புகழ் சொற்பொழிவும் நடந்தது.
காலையில் பரதேசி ஆறுமுக சாமி சமாதி மீதுள்ள சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், விநாயகர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 10 மணிக்கு பக்தர்கள் பால், பன்னீர், சந்தானம், புஷ்பம் ஆகிய காவடிகள் ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிடும் பெண்களுக்காக கோவில் முன்பு மகாயாகம் நடந்தது. இதில் விரதம் இருந்த 1, 016 சுமங்கலி பெண்கள் மாலை அணிந்து கலந்து கொண்டனர்.
பின்னர் சாதுக்கள் கலந்து கொண்டு பரதேசி ஆறுமுகசாமி சமாதிக்கு குழந்தை வரம் கேட்டு வந்த பெண்களுக்கு பிரசாதம் வழங்கினார். அதனை மண்சோறு சாப்பிடுவதுபோல் பெண்கள் முந்தானையில் வாங்கி சென்று கோவில் குளத்து படிக்கட்டில் வைத்து கைகளை பின்னால் கட்டி வாயால் கவ்வி சாப்பிட்டனர். கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சாமி வீதிஉலா நடந்தது.