பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தாடி முருகன் தலைமை வகித்தார். நகரசபை தலைவர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகை ஆர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் கடவுள் தந்த சந்தர்ப்பம். எல்லோரும் மக்களிடம் டிராமா போட்டனர். யார் டிராமாவும் எடுபட வில்லை.6-வது முறையாக ஜெயலலிதா அரியணை ஏறினார். புரட்சி தலைவி மீண்டும் முதல்வரானார். இந்த ஐந்தாண்டு மிகவும் முக்கியமானது. கழகத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் தந்த வள்ளல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டில்தான் கொண்டாட உள்ளோம்.
ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நமது முதல்வரை பாராட்டாமல் தினமும் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்கின்றனர்.தமிழக மக்களுக்கு நன்மை செய்வது எதிர் கட்சிகள் நோக்கம் இல்லை. தினமும் ஏதாவது அமளி, துமளி செய்து வெளியே வந்து விட வேண்டும் என்று செயல்படுகின்றனர். பொறுப்பேற்ற மறு நாளில் மக்களுக்கு யோசித்து நல்ல பட்ஜெட் வழங்கி உள்ளார்.
ஏழைகளுக்கு 10 லட்சம் வீடு, மாற்று திறனாளிகளுக்கு 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி மகளிர் விவசாயிகள் இப்படி பலதரபட்ட மக்களின் நலன் கருதி நல்ல நிதிநிலை அறிக்கை தந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் எம்.சி.சம்பத், எம்.எல். ஏ.சத்யா பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நகர அவைத் தலைவர் சேவல் ராஜதுரை வரவேற்று பேசினார். முடிவில் சீனுவாசன் நன்றி கூறினார்.