சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் உயிரியல் பூங்காவுக்கு 2 ஆப்பிரிக்கா முதலைகள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
சென்னை முதலை பண்ணை உதவி பராமரிப்பாளர் அஜெய் கார்த்திக், ஏர்-இந்தியா மண்டல கார்கோ மேலாளர் முகமது ரியாஸ், வன உயிரின ஆர்வலர் சோஹம் முகர்ஜி, ஏர்-இந்திய உதவி பொதுமேலாளர் சீனிவாசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2010-ம் ஆண்டு பெண் முதலை ஒன்று சென்னை முதலை பண்ணைக்கு விமானத்தில் பத்திரமாக கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையில் ஆமதாபாத்தில் உள்ள பூங்காவில் இருந்த முதலை ஒன்று கடந்த 2010-ம் ஆண்டு இறந்துவிட்டதால் அங்கு குழந்தைகள் பார்வையிட முதலைகள் இன்றி இருப்பதாக அறியப்பட்டது.
இதையடுத்து சென்னை முதலை பண்ணையில் இருந்து ஆப்பிரிக்கா நீட்டு வாய் பெண் முதலைகள் இரண்டை அங்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய வனபூங்கா, கால்நடை மருத்துவர் உள்பட அனைத்து தரப்பு அனுமதியும் பெறப்பட்டது.
ஆப்பிரிக்காவில் இருந்து 4 பெண் நீட்டு வாய் முதலைகள் கடந்த 1999-ம் ஆண்டு சென்னை முதலை பண்ணைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் 25 வயது கொண்ட 8 அடி நீளம் உள்ள 2 பெண் முதலைகள் இன்று (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த முதலைகள் எந்தவித கட்டணமும் இன்றி விமானத்தில் அனுப்பப்படுகின்றன. விமான போக்குவரத்தின் போது முதலைகளை கொண்டு செல்ல எந்த விதிமுறைகள் உள்ளதோ அதன்படி அனுப்பப்படும்.
கடந்த காலங்களில் லாரிகளில் முதலைகள் கொண்டு செல்லப்பட்டதால் 3 நாட்களாகும். ஆனால் தற்போது விமானத்தில் கொண்டு செல்லப்படுவதால் 3 மணி நேரத்தில் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.