அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாரதிய ஜனதா மாறும் என ஆலங்குடியில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பா. ஜனதா சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான வளர்ச்சி மிக்க நிர்வாகம் தேவை என நினைக்கிறோம்.
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.100 கோடியில் நீர் நிலைகளை தூர் வாருகிறோம் என அறிவித்தப்படி பணிகள் நடைபெறவில்லை. குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள 4 ஏரிகளும் தூர்வாரப்படவில்லை.30 மணல் குவாரிகளை மூடிவிட்டு 70 மணல் குவாரிகளை திறந்துள்ளனர். ஒரு லோடு மணல் ரூ.10 ஆயிரம் என்பதும், ஆற்று மணலுடன் கடல் மணலை கலப்படம் செய்து விற்பதும் மணல் விவகாரத்தில் அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சனையை விட ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அவசரப்படுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். எப்போதும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும்.ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில் திருநாவுக்கரசர் பா.ஜனதாவை குறை கூறுவது வேடிக்கையானது. பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்த திருமாவளவனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முருகன் என்பவரை மோடி நியமனம் செய்துள்ளார். அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பா. ஜனதா மாறும். கட்சியின் வளர்ச்சிக்காக நியமிக்கப்பட்ட முழுநேர ஊழியர்கள் 12,500 பேர் வருகிற 23-ந்தேதி முதல் பணியாற்ற உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.