கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைத்து போட்டியிட வேண்டிய தேவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடையாது என அக்கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தரப்புகள் ஒன்றிணைந்து போட்டியிட விருப்பதாக ஊடகங்கங்களில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இன்று அவரிடம் வினவிய போதே இதனைத் தெரிவித்தார்.
“இன்று கிழக்கு மாகாண மக்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் துணிச்சல் மிக்க தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரளத் தயாராகியுள்ளனர்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது எமது கட்சிக்கு கிடைத்த மக்கள் ஆதரவு தற்போது பன்மடங்காக அதிகரித்திருக்கிறது.
இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் கிழக்கில் அதிகூடிய வாக்குகளை பெறுகின்ற ஒரு தனிக்கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் என்பதில் சந்தேகம் கிடையாது.
அந்த வகையில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இன்ஷா அல்லாஹ் தனித்தோ அல்லது வேறு வியூகத்தின் அடிப்படையிலோ போட்டியிட்டு 10 ஆசனங்களைப்பெற்று கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
ஆகவே, வேறு தரப்புகளுடன் கூட்டமைத்து போட்டியிட வேண்டிய எந்தவொரு தேவையும் எமது கட்சிக்கு கிடையாது.
இதுவரை எந்தவொரு தரப்பினருடனும் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுமில்லை தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறிய சிலரும் மாற்றுக் கட்சிகளிலுள்ள மற்றும் பலரும் எமது கட்சியின் தலைவர், தவிசாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றனர்.
அத்தகையோருக்கு எமது கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பது குறித்து சாதகமாக பரிசீலிக்கப்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது. எவ்வாறாயினும் சமூக நலன் கருதி வேறு கட்சிகளுடன் கூட்டமைத்து போட்டியிட வேண்டிய தேவை ஏற்பட்டால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் அதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைமைத்துவம் தயாராக இருக்கிறது” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.