சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பாகிஸ்தான் சென்றார். அவரது வருகையை கண்டித்து நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘சார்க்’ (தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு) உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் வந்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். இதனையடுத்து ராஜ்நாத் சிங்குக்கு இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் எதிர்ப்புகளை மீறி ராஜ்நாத் சிங் நேற்று பாகிஸ்தான் சென்றார். பதன்கோட் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவைச் சேர்ந்த மத்திய மந்திரி ஒருவர் பாகிஸ்தான் சென்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
பாகிஸ்தான் புறப்படும் முன்பு அவர் கூறுகையில், தீவிரவாதம் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கு அர்த்தமுள்ள ஒத்துழைப்பு இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மாநாட்டில் இன்று கலந்து கொள்ளும் அவர், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், கள்ளநோட்டு மற்றும் போதைப்பொருளை புழக்கத்தில் விடுதல் போன்ற பிரச்சினைகளை எழுப்புவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே ராஜ்நாத் சிங் வருகையை கண்டித்து இஸ்லாமாபாத் மற்றும் லாகூரில் நேற்று ஹூரியத் மாநாடு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. காஷ்மீர் தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி மிஷால் மாலிக் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரஸ் கிளப் முன்பு ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மகன் யால்கா சயீத், தனது ஆதரவாளர்களுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான சாகோதி எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நேற்றுமுன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் காஷ்மீர் மக்களுக்கு தாங்கள் கொடுக்கும் நிவாரணப்பொருட்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அவர் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்.