தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் ராமு காலமானார்

1306 0

தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினனும் சாவகச்சேரி தாக்குதல், திண்ணைவேலி தாக்குதல் மற்றும் அந்த நேரத்தைய நடவடிக்கைகள் அநேகமானவற்றில் பங்குகொண்ட ராமு 15. 06.2017 அன்று இங்கிலாந்தில் காலமானார்.

எல்லா மரணங்கள் என்று இல்லாதுவிட்டாலும் சில மரணங்கள் நம் பிடரி பிடித்து உலுக்கி, இதயத்தை சுற்றி ஈர சாக்கு ஒன்றினால் போர்த்தியதுபோல இருக்கும்.ராமுவின் மரணம் கேள்விப்பட்டவுடன் அந்த உறைந்த நிலையே மனது இருக்கிறது.

1979ம்ஆண்டின் நடுப்பகுதியில்தான் ராமுவை சந்தித்தேன்.யாழ் ரிம்மர் ஹோலில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வரலாறு மற்றும் போட்டோ கண்காட்சி ஒன்று நடந்தது. அதனை பார்ப்பதற்காக தலைவர் என்னையும் கிட்டுவையும் கூட்டி சென்றிருந்தார்.

நாம் யாழ் ரிம்மர்மண்டபத்தில் நுழையவும் அங்கு ஐயர், குமணசாமி, முகுந்தன் (உமா), பொன்னம்மான் ஆகியோருடன் நின்றிருந்த ஒருவரை தலைவர் இவன்தான் ராமு என்று எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் முதல் சந்திப்பு.ராமுவும் தலைவரும் ஏறத்தாள ஒரே வயதினர்.சிவப்பான தோற்றம். சாதாரண உயரத்திலும் சிறிது குறைவான தோற்றம். சுறுசுறுப்பான நகர்வு என்று மனதில் படிந்த உருவமாக ராமு அன்றே.

அதன் பின்னர் சில மாதம் கழித்து மாங்குளம் பண்ணையில் அமைப்பின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிக்காக சென்ற போது அந்த பண்ணையின் பொறுப்பாளராக ராமு நின்றிருந்தார்..வழமையாக இரண்டு மூன்று பேர் மட்டுமே இருக்கும் அந்த பண்ணை பயிற்சிக்காக வந்தவர்களால் கலகலப்பானது.

தமிழீழத்தின் ஏதேதோ பகுதியில் நின்றிருந்த அதிகமானவர்கள் அங்கு கூடினோம். தலைவர், செல்லக்கிளிஅண்ணா, கலாபதி, மாத்தையா, ஐயர், பொன்னம்மான், ரகு, கிட்டு, சோமண்ணை, சித்தப்பா, பீரிஸ்அண்ணை,கந்தன் சுந்தரம் ஜோர்ஜ் மதி நான் என்று அந்த பண்ணை குலுங்கியது.

பண்ணையின் பொறுப்பாளரான ராமு என்னைவிட பலவருசங்கள் மூத்தவராக இருந்தாலும் நான் அவரை ராமு என்றே அழைக்கலாயினேன்.

அந்தபண்ணையில் வயதில் சிறியவர்களில் ஒருவரான எனக்கு என்னுடைய சமையல் முறையில் ராமு சலிக்காமல் உதவிகள் செய்வார்.காட்டின் உள்ளே வெகுதூரம் கூட்டி சென்று காட்டின் நுட்பங்களை மரங்களின் கொப்புகள் செடிகளின் கிளைகள் இயல்புக்கு மாறாக வளைந்து முறிந்து இருந்தால் அதன் அர்த்தம்; என்னவென்றும் காலடி தடங்களை காட்டுக்குள் அடையாளம் பிடிப்பது எப்படி என்றும் ராமு நிறையவே சொல்லி தந்தார்.

ஆனால் எல்லா வேலைப்பளுக்களுக்கு இடையிலும் ஓய்வு பொழுதில் ஏதாவது ஒரு மரத்தின் அடியில் ஒரு புத்தகத்துடன் ராமு இருப்பதை காணலாம்.அதிகாலை எழுந்ததில் இருந்து ராமுவுக்கான வேலைகள் அதிகம். சாமான் வாங்கு வதற்கு மாங்குளம் சந்திக்கு போகவேணுமென்றாலும் புதிய ஆட்கள் போனால் கடைக்கரார்கள் சந்தேகப்பட்டுவிடுவார்கள்.

என்பதால் அதற்கும் ராமுவே பல மைல்கள் சைக்கிளில் போய்வருவார்.இயக்க உறுப்பினளர்கள் யாராவது புகையிரதத்தில் மாங்குளம் ஸ்ரேசனுக்கு வருகிறார்கள் என்றால் அதற்கும் ராமுதான்.இத்தனை செய்தும் கொண்டு பயிற்சிஅணியிலும் பயிற்சி எடுத்தார். பயிற்சி முடியவும் இயக்கம் உடையத்தொட்ங்கியது.

மிகவும் கனவுகளுடன் வளர்த்த அமைப்பு இரண்டாக உடையும் அந்த தருணம் தலைவரின் வாழ்வில் மிகப்பெரிய சோதனைக்காலம்.. சிலர் சுந்தரத்துடன் விலகிச் சென்றார்கள்.பலர் இந்த உடைவினால் மனம்தளர்ந்து தலைவரிடம் சொல்லிவிட்டு சிறிது காலம் விலகி நிற்க சென்றார்கள். ஆனால் அந்த நேரத்திலும் ராமு தலைவருடன் நின்றான்.

தலைவருக்கு நம்பிக்கை அளித்த போராளிகளில் ஒருவரனாக ராமு நின்றிருந்தான் அந்த நேரத்தில்
அதன் பிறகு தலைவர் தமிழ்நாட்டில் வழக்கு ஒன்றுக்காகப பிணையில் நீண்டகாலம் நிற்கவேண்டிய தேவை வந்தபோது தாயகத்தில் சீலனுடன் இணைந்து தாக்குதல்களை திட்டமிட்டவர்களில் ராமுவும் ஒருத்தர்.

சிங்களபுலனாய்வாளர்கள் ஒரு விடுதலைப்புலி இப்படித்தான் இருக்கும் என்று போட்டு வைத்திருந்த அத்தனை வரைவிலக்கணத்தையும் ராமுவின் தோற்றம் மீறியதாக இருந்தது.. சிவந்த அமைதியான அந்த தோற்றம் எந்த சந்தேகத்தையும் கொடுக்காது.அதனால் ஒரு மோட்டார் சைக்கிளில் அலைந்து திரிந்து தரவுகளை எடுக்க ராமுவால் முடிந்தது.

சாவகச்சேரி காவல்நிலையம் மீதான தாக்குதலுக்கு முதல் தரவு ராமு எடுத்ததே ஆகும்.தலைவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட போது தாயகத்தில் இருந்து பல்கலைகழக மாணவர்களுடன இணைந்து தமிழகமுதல்வர் எம்ஜிஆருக்கு அனுப்பிய பல நூற்று கணக்கான தந்திகளில் ராமுவின் உழைப்பும் இருந்தது.

அதே போல தமிழீழகொள்கையை கூட்டணியினர் கைவிட்டு மாவட்டசபை மாயமானுக்குள் வீழ்ந்தபோது கூட்டணியினருக்கு கொடுத்த அரசியல்’ரீதியான பதில்களின் பின்னாலும் ஆயுதரீதியான பதில்களின் பின்பாகவும் ராமுவின் மோட்டார்சைக்கிள் நின்றிருந்தது.

ராமு ஒரு காலகட்டத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தின் உந்துசக்திகளின் முக்கியமானவர்.இந்த அமைப்பை அழியும் தருணத்தில் மீட்டவர்களில் ராமுவும் ஒருத்தர்.

தமிழர்களின்போராட்டவரலாற்றின் செல்திசையை வேகப்படுத்திய 1983 யூலை 23 திண்ணைவேலி தாக்குதலில் ராமுவும் நின்றிருந்தார்.

தமிழீழழவிடுதலைப்போராட்ட வரலாறு எழுதப்படும்போது ராமுவின் பெயர் தவிர்த்துவிட்டு போக முடியாத அளவுக்கு அவன் இந்த தாயகத்தின் விடுதலைப்போராட்டத்துக்கு ஏராளம் செய்து இருக்கிறான்.சைனைட்டை பொக்கற்றுக்குள் வைத்தபடி மோட்டhர் சைக்கிள் ஓடும் அந்த போராளி ராமு என்றும் நித்தியமாக எங்கள் நினைவுகளில் இருப்பான்.வீசும் காற்றிலும்தான்.

ச.ச. முத்து

 

Leave a comment