ரவியின் கீழ் தேசிய லொத்தர் சபை: ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் கவலை

511 0

சட்டத்திற்கு முரணாக தேசிய லொத்தர் சபையை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையிலான வர்த்தமானியை வெளியிட்டமை குறித்து தாம் கவலையடைவதாக இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் தெரிவித்துள்ளது.

மீண்டும் நிதி அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபையை கொண்டு வரும் வகையிலான வர்த்தமானியை வெளியிட்டு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணுமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1963ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி சட்டமூலத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட தேசிய லொத்தர் சபை, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கமைய குறித்த சபை நிதி அமைச்சரின் கீழ் இதுவரை இயங்கி வந்தது. இந்த நிலையில், தற்போதைய நிதி அமைச்சரான மங்கள சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் இந்த சபை இயங்க வேண்டும்.

எனினும், அதனை வெளிவிவகார அமைச்சரான ரவி கருணாநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, நிதி அமைச்சர் தவிர்த்து வேறு எந்த அமைச்சரின் வசமும் தேசிய லொத்தர் சபை வழங்கப்படுவது சட்டத்திற்கு முரணானது என, இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேவேகர கூறியுள்ளார்.

Leave a comment