வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி ஆராய்ந்துள்ளது.
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகள், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, ஜதார்த்த சூழ்நிலை, மக்களின் மனநிலைகள் என்பன தொடர்பில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் கீழுள்ள பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசக் கிளைகளின் நிர்வாகிகள், ஊரகக் கிளைகளின் நிர்வாகிகள், வட்டார அமைப்பாளர்கள், கட்சியின் பெண்கள் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் என கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதில் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் க.ஜெயக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.