வடக்கு நிலவரம்: பெரிய அவமானம் – வியாழேந்திரன்

374 0

இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு செய்யும் இந்த சண்டையானது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரும் துரோகமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாணத்தில் தற்போது நடைபெற்றுவரும் பிரச்சினையானது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியையும் வேதனையையும் உண்டுபண்ணிய விடயமாக இருக்கின்றது.

ஊழல் செய்ததாக கூறி வடமாகாண அமைச்சர்கள் இருவரை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இடைநிறுத்தியிருக்கின்றார். இந்த விடயத்தை இவ்வளவு தூரம் பெரிதுபடுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.

கட்சி மட்டத்தில் கூடி பேசி தீர்த்திருக்கலாம். இன்று இப்பிரச்சினை வடகிழக்கில் பூதாகரமான பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

ஒரு பிரிவினர் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து கொண்டு ஆளுநரிடம் சென்று முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருக்கன்றார்கள். இன்னொரு பிரிவினர் முதலமைச்சருக்கு சார்பாக இருக்கின்றார்கள்.

 நாங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்பொழுது இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்தப் பிரச்சினையானது தென்னிலங்கை இனவாதக் கட்சிகளுக்கும் பேரினவாதிகளுக்கும் அல்வா கிடைத்தது போன்றிருக்கின்றது.

இன்று நாங்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றியும் தீர்வைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஒரு மாகாண சபைக்குள்ளே இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுக்கொண்டு ஒரு மாகாண சபையை கொண்டு நடத்துவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்றால், எப்படி இவர்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேச முடியுமென்று தென்னிலங்கையில் இருந்து எத்தனையோ ஊடகங்களும் இணையத்தளங்களும் கேலித்தனமாக பேசுகின்ற நிலைமைக்கு வடமாகாண சபை நிலவரம் சென்றிருப்பது தமிழ் மக்களுக்கு பாதிப்பையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

எங்களுடைய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியை பொறுத்தமட்டில் எங்களுடைய வடமாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு சார்பாகவே கையொப்பமிட்டிருக்கின்றார்கள். எந்த விதத்திலும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துபோக வேண்டும் என பலர் தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கிலும் முழு இலங்கையிலும் பலர் வேலை செய்துகொண்டிருக்கையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற வடமாகாண சபை விவகாரம் அவர்களுக்கு ஒரு பெரிய வழியை திறந்துவிட்டதாக இருக்கன்றது. இதை ஒரு பெரும் அவமானமான விடயமாகவே நான் கருதுகின்றேன்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்துபோனால் அதனால் தமிழரசுக் கட்சிக்கும் எந்தப்பாதிப்புமில்லை, ஏனைய பங்காளிக்கட்சிகளுக்கும் பாதிப்பில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நம்பி வடக்கு கிழக்கில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே அது அமையும். ஆகவே நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி ஒன்றிணைத்து ஒருமித்த நோக்கோடு மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கல் எவ்வளவோ பிரச்சினைகள் நடைபெற்று வருகின்றன. வடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எத்தனையோ நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

எத்தனையோ மக்கள் கால், கைகளை இழந்து கண்களை இழந்து அங்கவீனர்களாக இருக்கின்றார்கள்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டங்களை அனுபவித்து வரும் சூழலில் இன்று வடமாகாண சபையில் இருக்கின்ற முதலமைச்சரை அனுப்பி விட்டு யார் முதலமைச்சராக வருவது என்ற பிரச்சினை உருவாகியிருக்கின்றது.

இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு இடுகின்ற இந்த சண்டையானது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரும் துரோகமாகும்.

வடமாகாணத்திலும் சரி கிழக்கு மாகாணத்திலும் சரி அமைச்சர்கள் செய்கின்ற ஊழலானது பிச்சைக்காரனின் மடியில் கை வைக்கின்ற செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.

முதலமைச்சர் அவர்கள் இரு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் செய்ததற்காக நடவடிக்கை எடுத்தால் நாங்கள் அமைதியாக இருந்து நடவடிக்கைகளை பார்க்க வேண்டும்.

அதைவிடுத்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமளவிற்கு நிலைமை போயிருக்கின்றது. இந்த செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடமாகாணசபை 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மாகாணசபையாகும்.

மக்களுடைய அன்றாட பிரச்சனைகள் அபிவிருத்திகள் என்று எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.

நாங்கள் எமது மக்களுக்கான தீர்வை நோக்கி எவ்வளவு வேகமாக பயணிக்கின்றோமோ அந்தளவிற்கு அபிவிருத்தியிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கத்திலிருந்து வருகின்ற நிதியைக் கொண்டு மாகாணத்தை அபிவிருத்தி செய்யலாம். புலம்பெயர் மக்களிடமிருந்து நிதியை பெற்று அபிவிருத்தி செய்யலாம்,

வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவியை பெற்று அபிவிருத்தி செய்யலாம், அதையெல்லாம் விடுத்து இன்று இங்கு நடக்கின்ற பிரச்சினையை பார்த்தால் எல்லோரும் கைகொட்டி சிரிக்கின்ற அளவிற்கு நிலைமை உருவாகி இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு எமக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதித்து இந்த விடயத்தில் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும்.

முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றுக்கொண்டு அவர்கள் தங்களுடைய நடவடிக்கைகளை வழமையான முறையில் செய்யலாம்.

இன்று வடக்கு கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமென்று நினைக்கின்ற சக்திகள் தேர்தலிற்கு முன்பிருந்தே செயற்பட்டு வருகின்றார்கள்.

தேர்தலுக்குப் பின்பும் செயற்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வடமாகாண விவகாரம் பெரிய வழியை திறந்து விட்டிருக்கின்றது என்றார்.

Leave a comment