எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

4740 0

வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பணம் வினியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு பரிந்துரைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஒரு முதல்-அமைச்சர் ஆளாவது இதுவே முதல்முறை.

தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த பிறகும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்யாத நிலையில், உடனடியாக அவர்கள் மீது வழக் குப்பதிவு செய்ய ஆணையிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தின்படி முதல்-அமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவியேற்றவர்கள் இப்போது அரசியல் சட்டத்திற்கு எதிரான வகையில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததன் மூலம் அமைச்சர்களாக பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டனர். முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறிவிட்டது.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையமும் கடமை தவறிவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது என்பதற்காக ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைத்ததுடன் கடமை முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் ஒதுங்கியிருக்கக்கூடாது. பணம் கொடுத்ததற்காக முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்வதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற கடமைகளை செய்ய முன்வராத இந்திய தேர்தல் ஆணையம், அதன் மீது விமர்சனங்கள் எழும்போது மட்டும் பொங்கி எழுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக கவர்னருக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஆணையிட வேண்டும். அவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment