மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாடான மாலியின் தலைநகர் பமாகோவில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளன. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு அந்நகரில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியான கான்காபா லே காம்பேமெண்ட்டில் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினர்.
விடுதியின் ஒரு பகுதிக்கு தீ வைத்த தீவிரவாதிகள் பல சுற்றுலா பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர். தாக்குதல் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் கடும் சண்டையிட்டு 20 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
மேலும், அங்கு பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதுவரை 2 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மாலி நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என பமாகோவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.