குற்றமற்ற அமைச்சர்கள் தொடர்பில் தாம் உத்தரவாதம் அளிக்க தயாரில்லை என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவரால் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு தான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையினால் தொடர்ச்சியாக மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே தான் தனது ஒத்துழைப்பை நல்க முயற்சிப்பதாக சமபந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டரீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என தான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை வழங்குவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயம் மேலும் தாமதப்படுத்தக் கூடியதென தாம் கருதவில்லை ஆதலால், அது குறித்து தாமதமின்றிச் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் தான் செல்வாக்கைச் செலுத்த வேண்டிய தேவையுள்ளதாகத் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவராக மாவை சேனாதிராஜாவும் செயலாளர் நாயகமாக கே.துரைராஜசிங்கமும் உள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளராகத் தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்து அதனைத் தங்களுக்குத் தெரிவித்தது.
அதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களின் முன்னிலையில், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க மாவை சேனாதிராஜாவின் வழிகாட்டல் ஆலோசனைகளும் தேவை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர்,
இது அவ்வாறே இடம்பெற்றதா? என்பதை விக்னேஸ்வரன் தங்களை கேட்டுக் கொள்ளலாம் என அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா மக்களுக்காகவும் கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்து, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார்.
இத்தகைய பெறுமதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.
எவ்வாறாயினும், இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் தனது சாதகமான செல்வாக்கைப் பிரயோகிக்க முயற்சிப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
அத்துடன் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அந்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.