நாடாளுமன்ற விவகாரங்களை ஒளிபரப்ப தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கோப் குழு உட்பட நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் கூட்டங்களை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டங்கள் தொடர்பான செய்திகளை சேரிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களில் நடக்கும் ஊழல், மோசடிகள் மற்றும் தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் கோப் குழு உட்பட தெரிவுக்குழுக்களின் விசாரணைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சரியான பிரசாரங்கள் வழங்கப்படுவதில்லை.
தெரிவுக்குழுக்களின் விசாரணைகளில் வெளியாகும் ஊழல், மோசடிகள் தொடர்பாக அறிக்கைகளை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என எண்ணுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இந்த அறிக்கைகள் குறித்து விவாதம் நடத்த எண்ணியுள்ளதாகவும் பக்கச்சார்பின்மையை உறுதிப்படுத்த கோப் குழுவின் தலைவர் பதவியை தற்போது எதிர்க்கட்சிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளரார்.
இதனைத் தவிர நாடாளுமன்ற விவகாரங்களை அறிந்து கொள்ளும் வகையில் செல்போன் செயலிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம் உலகில் எங்கிருந்தாலும் மூன்று மொழிகளிலும் நாடாளுமன்ற விவகாரங்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.