அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் என்று ஆங்கில தொலைக்காட்சி வீடியோவை வெளியிட்டது.இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். சட்ட சபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.இந்த நிலையில் துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவை திடீரென சந்தித்து பேசினார்.
கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். வீடியோ காட்சியை எம்.எல்.ஏ. சரவணன் மறுத்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடக்கவில்லை. கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்பட வில்லை. 3 மாதம் கழித்து வீடியோவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரின் முதல்வர் கனவு பலிக்காது. கவர்னரிடம் அவர் கூறிய புகார் தவறானது.ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்துக்கு சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது. வீடியோ விவகாரத்தில் நீதி விசாரணை என்பது தேவையற்ற ஒன்றாகும்.அ.தி.மு.க. ஆள்வதற்காகவே மக்கள் வாக்களித்து உள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க.வில் அணிகள் என்பதே கிடையாது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தனி அணியாக செயல்பட முடியாது. மீறி செயல்பட்டால் பதவி பறி போய் விடும் என்பது அவர்களுக்கு தெரியும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்.
இந்த ஆட்சியை காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதமுள்ள 4 ஆண்டுகள் தொடரும். ஜெயலலிதாவின் ஆட்சியை கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
பேச்சு வார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு கலைக்கப்படவில்லை. ஓ.பி.எஸ். குழுவை கலைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.அ.தி.மு.க. பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா. அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நல்ல உறவு நீடித்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.