தனது மதத்துக்காகவும், இனத்துக்காகவும் குரல் எழுப்புபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு இந்த அரசாங்கத்தில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தறைப் பிரதேசத்தில் விகாரையொன்றின் கட்டிடம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
புதிய சட்டங்களை போட்டு மதம், இனம் என்பவற்றிலிருந்து மக்களைத் தூரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது சமயத்தின் மீதுள்ள பற்று அதிகரிக்குமே அன்றி அது குறையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கத்திலேயே அதிகம் துன்புறுத்தப்படுபவர்கள் பௌத்த பிக்குகள். அடுத்தபடியாக, நாட்டுக்காக பணியாற்றியவர்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், தேவைப்படின் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியாவது இனவாதத்தை இல்லாமல் செய்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளின் பின்னால் உள்ளவர்கள் பொதுபல சேனாதான் எனவும், அவர்களுக்கு அரசாங்கமே அடைக்கலம் வழங்குவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அரசாங்கத்தின் அடைக்கலம் இல்லாவிடின் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தையே அவர் முஸ்லிகளுக்கு நடாத்திய இப்தார் நிகழ்வின் போது கூறியிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.