விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் நீடிக்க விடமாட்டோம்- சயந்தன்

248 0

வடமாகாண சபையின் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலத்திற்கும் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருக்க அனுமதிக்கமாட்டோம் என்று வடமாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் கூறினார்.

இலங்கை தமிழரசு கட்சியின் நீதிக்கான உறுப்பினர்கள் சார்பில் இன்று சனிக்கிழமை கட்சி அலுவலத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை சபையில் பெரும்பான்மையுடன் நிருபிப்போம் என்றும் 3 பொறிமுறைகளின் மூலம் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலக்குவோம் என்றும் அவர் கூறினார்.

மாகாண சபையின் நிலைப்பாடுகள் வினைத்திறன் அற்றதாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் வடமாகாண முதலமைச்சருடன் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சரின் செயற்பாடுகள் நம்பகத்தன்மையுடையதாக இல்லை. அவர் மீதான நம்பிக்கையினை இழந்துள்ளோம். முறையற்ற விசாரணைக்குழுவினை அமைத்துவிட்டு, விசாரணைக்குழுவின் அறிக்கை சட்டத்தில் வலுவற்றவதாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே தெரிவுக்குழுவினை கோரினோம் என்றும் குறிப்பிட்டார்.

புதிய முதலமைச்சருக்கான சிபார்சுகள் தற்போது முன் வைக்கப்பட்டுள்ளது. அதில் சீ.வி.கே.சிவஞானம் பெரும்பான்மையை பெற்றுள்ளர். அத்துடன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன.

ஆளும் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையாக 15 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராகவும், 14 உறுப்பினர்கள் சார்பாகவும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

சமரசத்திற்கான நடவடிக்கைகள் ஏதும் உள்ளதாக என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சமரசத்திற்கான ஒரு கூற்றினைக்கூட தவறவிடமாட்டோம். சுமரசத்திற்கான அனைத்து வாய்ப்புக்களையும் இறுதிவரை பயன்படுத்துவோம் என்றார்.

Leave a comment