அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாகவே தினகரன் கட்சி அலுவலகத்துக்கு செல்லாமல் இருக்கிறார் என்றும், எடப்பாடி பழனிசாமியின் அழைப்புக்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் கட்சி பணிகளை மேற்கொண்டார். ஆனால் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டதால் டி.டி.வி.தினகரனும் சிறை செல்ல நேரிட்டது.
இதனை தொடர்ந்து பிளவுபட்ட 2 அணிகளும் இணைவதற்கு வசதியாக சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். கட்சியையும் ஆட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே நடத்திச் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான தினகரன், கட்சியில் இருந்து என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது. கட்சி பணிகளை நான் தொடர்வேன் என்றார். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தினகரனை ஒதுக்கி வைத்த முடிவில் மாற்றம் இல்லை என்று கூறினர்.
இதுபோன்ற ஒரு சூழலில் தினகரனை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். இதுவரை 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சி பணியை தினகரனால் மட்டுமே திறம்பட நடத்த முடியும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தினகரனோ கட்சி அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் வைத்தே தினமும் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார்.
அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாகவே தினகரன் கட்சி அலுவலகத்துக்கு செல்லாமல் இருக்கிறார் என்றும், எடப்பாடி பழனிசாமியின் அழைப்புக்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தினகரன் பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து இன்று முதல் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல் நாளான இன்று தேனி மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் 1000 நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்கிறார்கள்.நாளை வட சென்னை மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட முழுவதிலும் உள்ள நிர்வாகிகள் இதில் பங்கேற்கிறார்கள்.இதேபோல் தினமும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.