17 ஆயிரம் ஆசிரியர்களின் தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்

313 0

பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் 42 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் வெளியிட்டார். இந்த கல்வி ஆண்டில் புதிதாக 4,084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கையில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டு விவாதித்தனர்.

அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

தமிழகத்தில் தொலைதூர கிராமப் பகுதிகள், மலைப்பகுதிகளில் மிக அவசியமாகக் கருதப் படும் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.

மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறையை பின்பற்றுதல், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்தல் உள்பட அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி என்ற விருது வழங்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி என்ற வகையில் 4 விருதுகள் வழங்கப்படும்.

தொடக்கப்பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை புதிய பரிமாணத்தில் மாற்றி அமைக்கப்படும். செயல்பாடுகளுடன் கூடிய புதிய கற்றல் அட்டைகள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் வழங்கப்படும்.

2017-18-ம் கல்வி ஆண்டில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக 486 அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலா 3 கம்ப்யூட்டர்கள் கொண்ட கணினி வழிக்கற்றல் மையங் கள் அமைக்கப்படும்.

மாணவிகள் படிக்கும் 5 ஆயிரத்து 639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் எரியூட்டும் எந்திரம் வழங்கப்படும்.

மாணவர்கள் தங்கள் பொது அறிவை வளர்க்கவும் மொழித்திறனை வளர்க்கவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்கப்படும். 31 ஆயிரத்து 322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்தத் திட்டத்துக்கு ரூ.4.83 கோடி செலவிடப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 336 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் பாராட்டுச்சான்று மற்றும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்தத் துறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாகவும், தற்காலிகப் பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீடிப்பு வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தை தவிர்ப்பதற்காக 17 ஆயிரம் தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும்.

சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பணியிடைப் பயிற்சிகள் வழங் கப்படும். 1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டுக்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.

அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் திறனறி தேர்வுகளில் பங்கேற்கும் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மேலை நாடுகளுக்கு கல்விப்பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

கலை, இலக்கியம், நுண்கலை உள்பட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் கொண்ட ஒரு மாபெரும் கலைத் திருவிழா அறிமுகம் செய்யப்படும். 12-ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் மேற்படிப்பு தொடரும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக அனைத்து மாவட்டங்கள், ஒன்றியங்கள் தோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்.

கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அமைக்கப்படும். பயிற்சி எடுப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும்.

மேற்படிப்பு, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வு ஆகியவற்றுக்காக அனைத்து உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் வழிகாட்டி மையங்கள் அமைக்கப்படும். இதுகுறித்த ஆலோசனை, வழிகாட்டிக் கருத்தரங்கு ஆகியவை மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் நடத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறைக்காக தனியாக கற்றல், கற்பித்தல் மேலாண்மைத் தளம் உருவாக்கப்படும். அரசுத் தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக் கப்படும்.

மெட்ரிக் பள்ளிகள் தொடங்க அனுமதி, அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் பெறும் முறைகள், இணையவழி மூலம் நடைமுறைப்படுத்துவதோடு அதன் நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.

அரசு பொது நூலகத்துறை நூலகங்களுக்கு பயனுள்ள மற்றும் தரமான நூல்கள் வாங்கிட ரூ.25 கோடியும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு தொழில்நுட்ப புதிய நூல்கள் வாங்கிட ரூ.5 கோடியும் ஒதுக்கப்படும்.

32 மாவட்ட தலைநகரங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் ஒரு லட்சம் நூல்கள் அடங்கிய ஒரு மாபெரும் நூலகம் ரூ.6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். இதில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, போட்டித்தேர்வு பயிற்சி மையம், சுயநூல் வாசிப்பு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

பல்வேறு நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சார்ந்த நூலகங்கள் மற்றும் காட்சி கூடங்கள் அமைக்கப்படும். ஏற்கனவே 8 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 24 மாவட்ட மைய நூலகங்களிலும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 314 முழுநேர கிளை நூலகங்களில் ஏற்கனவே 191 நூலகங்களில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தப்படும்.

அனைத்து நூலகங்களுக்கும் பொதுவான அட்டவணையை உள்ளடக்கிய ஒரு நவீன மின்நூலகம் அமைக்கப்படும். அரிய வகை நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடம் பெற்று பாதுகாத்து பயன்படுத்த ஏதுவாக ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அரிய வகை நூல்களை பேணி பாதுகாக்கும் வகையில் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் நடமாடும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். மெட்ரிக் பள்ளிகள் நிர்வாக மேம்பாட்டை சீர்படுத்துவதற்காக இரண்டு புதிய மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு 34 புதிய வாகனங்கள் வாங்கப்படும். திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் 3-ம் வகுப்புக்கு நிகரான சமநிலைக் கல்வித்திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்படும். விழுப்புரம், சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு அளவில் சமநிலைக் கல்வி அளிக்கப்படும்.

உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும். உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்கப்படும்.

தமிழ்நாடு உடல் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு உயிர் எந்திரவியல் முதன்மை மையம் அமைக்கப்படும்.சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும்.

மதுரை மற்றும் திருச்சியில் உள்ள விளையாட்டு விடுதிக் கட்டிடத்தில் கூடுதலாக தங்கும் இட வசதி ஏற்படுத்தப்படும். தேசிய மாணவர் படை பயிற்சிக்காக கோவையில் வானூர்தி பாவிப்பு நிறுவப்படும்.தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விடுதி கட்டப்படும்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மொத்தம் 42 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Leave a comment