பிரான்சு இளையோர் அமைப்பு சிறப்பாக நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வு!

3952 0

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வுகள், நேற்று (11.06.2017) ஞாயிற்றுக்கிழமை பகல் 14.00 மணி தொடக்கம் 10 rue de la Philosophie 93140 Bondy என்னும் முகவரியில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தியாகி பொன்சிவகுமாரன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 23.06.1989 அன்று சாவடைந்த நாட்டுப்பற்றாளர் ஐயா அவர்களின் மகள் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து தியாகி பொன்சிவகுமாரன் தொடர்பான விவரணப்படம் திரையில் காண்பிக்கப்பட்டதுடன் பிரான்சு இளையோர் அமைப்பினரால் பொன்சிவகுமாரன் பற்றிய விடயங்கள் விவரிக்கப்பட்டன.தொடர்ந்து பிரான்சிலுள்ள இளையோர் கட்டமைப்புக்களின் அறிமுகமும் அவற்றின் செயற்பாடுகள் பற்றிய காட்சிப்படுத்தலுடனான விளக்கமும் குறித்த கட்டமைப்புகளின் பிரதிநிதிகளினால் அழகாக கொடுக்கப்பட்டமை அனைவருக்கும் ஆச்சரியமளிப்பதாய் அமைந்திருந்தது.

முதலில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் பற்றிய அறிமுகத்தை அதன் பொறுப்பாளர் மகேந்திரநாதன் பபியான் அவர்கள் சிறப்பாக வழங்கியிருந்தார். அதில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் இலச்சினை குறித்து நிற்கும் கருத்தை விளக்கியிருந்ததுடன் இளையோர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அதன் செயற்பாடுகள் குறித்தும் விளக்கியிருந்தார். பொன் சிவகுமார் அவர்கள் ஒரு மாணவனாக இருந்து தனது உயிரையே தியாகம் செய்திருந்தார். நாம் எமது தேசிய இலக்கை அடையவேண்டுமென்றால் நாம் இளையோர் அமைப்பாக ஒன்றுசேர்ந்தால்தான் அது சாத்தியமாகும் என உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

தொடர்ந்து Help For Tamil People அமைப்பின் முகாமையாளர் கேந்திரராஜா திவாகர் தமது அமைப்புப் பற்றிய அறிமுகத்தினை மேற்கொண்டார். குறித்த அமைப்பு தாயகத்தில் வலுவிழந்து காணப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை நோக்கமாகக் கொண்டு இயங்குவதாகவும் எதிர்காலத்தில் பல திட்டங்களை செயற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் திரையில் காட்சிப்படுத்தலுடன் விளக்கியிருந்தார்.

தொடர்ந்து ஆர்ஜொந்தை தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் தமது அமைப்பின் நோக்கம் பற்றி சிறப்பாக வெளிப்படுத்தியிருந்;தனர். ஒவ்வொரு சனிகக்pழமைகளிலும் ஆர்ஜொந்தைப் பகுதியில் தாம் பிரெஞ்சு வகுப்புக்களை நடாத்துவதாகவும் அதில் வைத்தியர்களிடம் சென்றால் எப்படி நோய்பற்றி பிரெஞ்சு மொழியில் விளக்கமளிப்பதுபற்றியே தாம் அதிகமாகக் விளக்கமளிப்பதாகவும் தெரிரிவித்தனர். அத்துடன் பிரெஞ்சு மொழியில் படிவங்கள் நிரப்புதல் பிரெஞ்சு அலுவலக உதவிகளுக்கு நேரடியாகச் சென்று மொழிபெயர்த்தல் போன்ற விடயங்களைத் தாம் செய்வதாகவும் தெரிவித்திருந்தனர்.

தமிழ் மாணவர் அமைப்பின் சார்பில் தவராஜா சஞ்சித் அவர்கள் ஓர் அறிமுகத்தைச் செய்திருந்தார். எமது நோக்கமே தமிழை வளர்க்கவேண்டும் என்பதுடன், தமிழ் ஓர் அறிவியல் மொழி என்பதைத் தாம் தொடர்ந்து கற்கும்போதுதான் உணரக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தமிழின் பெருமை தொடர்பிலும் தமிழைக் காக்கவேண்டியதன் அவசியத்தையும் விளக்கிய அவர், இன்று தமிழ் பட்டப்படிப்பில் 20 வரையான மாணவர்களே உள்ளனர் எனவும் இது பன்மடங்காகப் பெருகுவதன் மூலமே எமது பண்பாடு கலாச்சாரம் என்பதைப் பேணுவதுடன் அறிவியல் இலக்கை அடையமுடியும் என்றார்.

அடுத்து சேர்ஜி தமிழ் இளையோர் அமைப்பின் அறிமுகத்தை அதன் உறுப்பினர் தவராஜா திவாகர் அவர்கள் செய்திருந்தார். தமது அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் சேர்ஜிப் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகள் பாரிஸ் பகுதிக்கு வந்துசெல்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக அங்குள்ள ஆர்வமிக்க இளையோர் தமது அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தாம் தாயகத்தில் வசதியற்றவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டே செயற்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் 60 அகவைக்கு மேற்பட்ட மூதாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக்கேட்டு, அவர்களுக்கு பிரெஞ்சு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் ஆர்வத்துடன் தெரிவித்தமை அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது. இதேவேளை, பழைய பொருட்களை அல்லது தேவையற்ற பொருட்களை மக்களிடம் இருந்து பெற்று அதனை சொற்ப விலைக்கு விற்று வரும் பணத்தை தாயக மக்களுக்கு உதவுவதே தமது கடமை எனவும் சாதாரணமாகத் தெரிவித்தார்.

இடைவேளையைத் தொடர்ந்து பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு கலந்துகொண்ட அனைவரிடம் இருந்தும் பதில் கேட்கப்பட்டது. அனைத்தப் பதில்களும் எழுதுபலகையில் வரிசைப்படுத்தப்பட்டன. எமது கடமைகள் எவை?, எமது பலம் எது? எமது பலவினம் எது? எமது பலத்தைப் பயன்படுத்துவது எப்படி? எமது பலவீனத்தை எதிர்கொள்வது எப்படி? போன்ற பல்வேறு பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு முரண்பாடான கருத்துக்களும் பலரால் முன்வைக்கப்பட்டிருந்தன. இளையோர் அமைப்பினர் மட்டுமல்லாமல், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்தகொண்டு தமது கருத்துக்களை இளையோர் முன்பாக வைத்திருந்தனர். இது அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் திரு.கோகுலன், திரு. பாலசுந்தரம், திரு.மேத்தா ஆகியோர் உரையாற்றியிருந்தனர். அவர்கள் தமது உரைகளில் இளையோர்களின் பணியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர்.

நிறைவாக நிகழ்வு தொடர்பில் இளையோர் அமைப்பின் சார்பில் நன்றிதெரிவிக்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

Leave a comment