வட மகாண சபையின் இன்றைய அமர்வின் போது அமைச்சர்களிற்கெதிரான விசாரணைக் குழு அறிக்கை தொடர்பாக ஒருதலைப்பட்சமாக ஒரு அமைச்சரை மட்டும் தன்னிலை விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்கி எதிர்க்கட்சிக்கு அது தொடர்பான கருத்துகளைக் கூறுவதற்குச் சந்தர்ப்பம் மறுக்கப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளார்.
சபையில் எதிர்க்கட்சித் தலைவரினால் பிரஸ்தாபிக்கவிருந்த விடயங்கள் அறிக்கையாகக் கீழே தரப்படுகின்றது.
முதலமைச்சரினால் அமைக்கப்பெற்ற வட மாகாண அமைச்சர்களிற்கெதிராகச் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கை வெளியானதிலிருந்து ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களூடாகவும் இவ்வறிக்கையினைக் கொச்சைப்படுத்தும் முறையிலான பல கருத்துகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இது தொடர்பான எனது நிலைப்பாட்டை முதலிற் பதிவு செய்து கொண்டு அவ்வறிக்கையின் விதப்புரையில் கூறியவை தொடர்பான எனது கருத்தினைக் கூற விரும்புகின்றேன்.
விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் பக்க சார்பானவர்கள், ஒவ்வோர் கட்சியைச் சார்ந்தவர்கள், இவ்விசாரணையை நடாத்துவதற்குத் தகுதியுடையவர்களல்லர் என்ற கருத்து சில ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் வேண்டுமென்றே விசமத்தனமாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது. ஓர் அமைச்சரின் தூண்டுதலினாலேயே இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்கு அறியக் கிடைக்கின்றது. விசாரணைக் குழு அங்கத்தவர்கள் இவ் விசாரணையை நடாத்துவதற்குப் பொருத்தமற்றவர்கள் என்று கருதியிருந்தால் விசாரணைக் குழு உறுப்பினர்களின் பெயர்கள் சபைக்கு கௌரவ முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேளையிலேயே அதற்கான தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்விசாரணைக்குழுவை ஏற்றுக் கொண்டு, அதன் முன் ஆஜராகி விளக்கங்கள் கொடுத்துவிட்டு இன்று அவ்வுறுப்பினர்கள் மீது குறைகூறுவது மிகவும் கீழ்த்தரமான ஓர் பண்பற்ற செயலென்பதனை நான் முதலில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
முதலமைச்சர் அவர்கள் விசாரணைக் குழு உறுப்பினர்களிற்கான விதிமுறைக் குறிப்பில் (Terms of Reference) ‘குழுவின் தீர்மானங்கள் ஏகமனதாகவோ, அப்படியொருமித்த தீர்மானமெடுக்கப்படாதவிடத்துப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒருமைப்பாட்டுடன் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தும் குழுவின் தீர்மானங்கள், விதப்புரைகள் யாவும் ஏகமனதாகவே காணப்படுகின்றதென்பதனையும் நான் இங்கு விஷேடமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
விசாரணைக் குழு அறிக்கையில் விவசாய அமைச்சர் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சில அவதானிப்புக்களை முதலில் கூற விரும்புகின்றேன்.
கணக்காய்வில் குறிப்பிட்ட ஓர் அமைச்சு தொடர்பாக எவ்வித குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறாக அமைச்சின் கணக்காய்வறிக்கையில் எவ்வித குற்றங்களும் காணப்படாத நிலையில் விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றங்களிருப்பதாகக் கூறியிருப்பதாகப் பகிரங்கமாகச் சிலர் கூறுவதை அறியக் கூடியதாக இருக்கின்றது. முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், கணக்கிற்கு வந்தவைகள் தான் கணக்காய்விற்குட்படுத்தப்படும். கணக்கிற்கு வராதவை கணக்காய்விற்கு உட்படுத்தப்படமாட்டாது.
உதாரணத்திற்குக் கையூட்டல் நடைபெற்றிருந்தால் அது கணக்காய்விற்கு உட்படுத்தப்படமாட்டாது. இன்னுமொரு விடயம் தெரிந்து கொள்ள வேண்டும் கணக்காய்வென்பது சகல நிதிக் கொடுக்கல் வாங்கல்களையும் பரிசோதிப்பது அல்ல. ஒரு சில மாதிரிகளைக் கணக்காய்விற்குட்படுத்தி அதிலிருந்து கணக்கு சம்பந்தமான அபிப்பிராயத்தைக் கொடுப்பதே கணக்காய்வு. (Audit is an opinion on the financial status based on test checks.) கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுகணக்குக் குழுக் கூட்டத்தின் போது கூட சகல பாடசாலைகளிலும் மாணவர் அனுமதிக்காகப் பணம் பெறுகின்றார்கள் ஏன் இரண்டு பாடசாலைகளை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள் என உறுப்பினர்களால் வினவப்பட்டபோது பிரதிக் கணக்காய்வாளர் நாயகம் அவர்கள் இதே பதிலைத்தான் கூறியிருந்தார். ஆதலால் கணக்காய்வு என்பது என்ன என்று புரியாமல் கணக்காய்விற் கூறவில்லையே, விசாரணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே என்று கூறுபவர்களின் அறியாமையையிட்டுக் கவலைப்படுவதைத் தவிர வேறெதுவும் என்னால் கூற முடியாது.
மருதங்கேணி கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் தமது கடிதத் தலைப்பைத் தவறாககப் பயன்படுத்தியதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்தது தவறு என இச் சபையில் நானும், கௌரவ உறுப்பினர் சுகிர்தன் அவர்களும் விவாதித்திருந்தோம். எங்கள் இவ் விவாதம் சரியென்பதனை இவ் விசாரணைக் குழு அறிக்கை நிரூபித்துள்ளது. இப்பதவி நீக்கம் தொடர்பாகக் கூட்டுறவு ஆணையாளரிற்கு எதிராக சமாசத் தலைவரினால் தொடரப்பட்ட வழக்கில் இக் குழுவின் அங்கத்தவரொருவர் சட்டத்தரணியாகச் செயற்பட்டுள்ளார். ஆதலினால் இங்கு அக்கறை முரண்பாடொன்றுள்ளது (conflict of interest) என சிலரால் எடுத்துக் கூறப்படுகின்றது. முதலில் அவ் வழக்கு கூட்டுறவு ஆணையாளரிற்கும் பிரதேச செயலரிற்கும் எதிரானதேயன்றி அமைச்சரிற்கு எதிரானதேயன்று. ஆதலினால் அவ் வழக்கில் ஆஜராகிய ஒருவர் இவ் விசாரணைக் குழுவில் அங்கத்தவராக இருப்பது எவ் வகையிலும் ‘அக்கறை முரண்பாடாக’ அமையாது.
மற்றையது மூன்று குழு அங்கத்தவர்களில் ஒருவர் மேல்தான் இக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மூவரடங்கிய அவ் விசாரணைக் குழுவில் மற்றைய இருவரும் இதே முடிவைத்தான் எடுத்துள்ளார்கள். முதலமைச்சரின் விதி முறைக் குறிப்பில் ‘ஒருமித்த தீர்மானமெடுக்கப்படாதவிடத்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒருமைப்பாட்டுடன் நிறைவேற்றப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலினால் அக்கறை முரண்பாடு உள்ளவர் எனக் கூறப்படும் விசாரணைக் குழு உறுப்பினரைத் தவிர்த்தாலும் ஏனைய இரு பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவும் இவ்வாறாகக் காணப்படுகின்றது. இதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பீற்றா பவர், யூல் பவர் ஆகிய நிறுவனங்களுடன் பிழையான முறையில் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக சபைக்கு முதன்முதல் தெரியப்படுத்தியவன் நான். 2014ம் ஆண்டு அந் நிறுவனத்திடமிருந்து 19.5 மில்லியன் ரூபாவிற்கான 6 பவுசர்களைப் பெற்றுக் கொண்டது, அதனைக் கணக்கிலிடாமல் நேரடியாகப் பொருட் கொள்வனவிற்குப் பயன்படுத்தியமை தொடர்பாக நான் அன்றே சுட்டிக்காட்டியிருந்தேன். விவசாய அமைச்சரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதில்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத காரணத்தால் கணக்காய்வாளர் நாயகத்திற்கும் கடிதம் எழுதியிருந்தேன். இன்று நான் கூறியது சரியென்று விசாரணைக் குழு அறிக்கை நிரூபித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மூங்கில், மல்லிகை வளர்ப்புத் திட்டங்கள், எள் விநியோகித்து சுயதொழிலை முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக குழுவின் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அனுமதி பெறத் தேவையற்ற விடயங்களிற்கெல்லாம் அனுமதி பெறவேண்டுமென வலியுறுத்துவது அமைச்சர் அவர்களின் அதிகார துஸ்பிரயோகமென விசாரணைக் குழு அபிப்பிராயப்படுவதாகவும்’ மற்றும் ‘மூங்கில் நடுகைத் திட்டத்தை நிராகரித்தமை சட்டபூர்வமற்றதெனவும், முதலீட்டாளரைத் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டதால் அவர் (அமைச்சர்) நடத்தை மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், விசாரணைக்குழு கருதுவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் சந்தேகத்தில் நியாயமிருக்கின்ற மாங்குளத்தில் கரும்புச் செய்கைக்காக முதலீடு செய்வதற்காக முன்வந்த ஓர் நிறுவனத்தில் இருந்தும் இதே போன்ற ஓர் முறைப்பாடு எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அமைச்சர் ஏதோ 25 வரை கேட்டதாகவும் அவர்கள் 15 வரை தருவதாகவும் கூறியதாகவும் நான் அறிகின்றேன். அது என்ன 25, 15 எனக்கு விளங்கவில்லை.
சுண்ணாகத்தில் கழிவு எண்ணெய் குடி நீரிற் கலந்த விடயம் தொடர்பாக கௌரவ விவசாய அமைச்சரினால் அமைக்கப்பட்ட நிபுணத்துவக்குழு நொதேர்ண் பவர் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கென்றே அமைக்கப்பட்டுக் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டதென்று நான் இந்த அவையிலே மணித்தியாலக் கணக்காக உரையாற்றியமை சரியென இவ் விசாரணைக் குழுவின் அறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக விசாரணைக் குழு அறிக்கையில் கல்வி அமைச்சர் தொடர்பாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சில அவதானிப்புக்களைக் கூற விரும்புகின்றேன்.
ஆசிரியர் – அதிபர் மகாநாட்டிற்கென இரண்டு நாட்களில் 40 மில்லியன் செலவு செய்யப்பட்டிருக்கின்றது. இது எவ்வாறு கல்வி வளர்ச்சிக்கு உதவியது என அவ் அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு அறிக்கையில் மட்டுமல்ல 2014 கணக்காய்வு அறிக்கையில் ரூபா 149.68 மில்லியன் செலவில் நடாத்தப்பட்ட ‘பல்வேறு செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களமிடமிருந்து கோரப்பட்ட தரவுகள் கணக்காய்விற்குத் தரப்பட்டிருக்கவில்லையெனக் கூறப்பட்டிருக்கின்றது.’
விசாரணைக்குழுவினுடைய வீண்விரய செயற்பாடுகள் தொடர்பான அவதானத்தினைக் கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
வடமராட்சி கல்வி பணிப்பாளர் திரு. நந்தகுமார் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையில் ‘கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரது சாட்சியங்களிலிருந்து கல்வி அமைச்சில் நடைபெற்ற நியமனங்கள், பதவி வழங்கல் இடமாற்றம் தொடர்பில் அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்ட நிர்வாக ரீதியான கடமைகளில் அமைச்சர் வாரியம் தலையிட்டுள்ளதாகவும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதே அமைச்சர்களினதும், அமைச்சர் வாரியத்தினதும் கடமையாகுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது,
திரு. நந்தகுமாரின் விடயத்தில் மட்டுமல்ல வலி. வடக்குக் கல்விப்பணிப்பாளர் திரு. சந்திரராஜா அவர்களின் விடயத்திலும் இதே தவறையே அமைச்சர் வாரியம் விட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதலால் விசாரணைக்குழுவின் அறிக்கை இதில் தெளிவாக உள்ளதென்பதையே திரு. சந்திரராஜா தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது.
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் பாடசாலையின் அதிபர் கல்வி அமைச்சர் அவர்களின் அழுத்தம் காரணமாகவே நியமிக்கப்பட்டதாக செயலாளரின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு விசாரணைக்குழு முடிவிற்கு வந்துள்ளது.
அமைச்சரின் அழுத்தத்தில் நியமிக்கப்பட்ட இவ் அதிபரைப் பற்றி சில விடயங்களை நான் குறிப்பிட வேண்டும். இவ் அதிபர் தொடர்பாகக் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டதன்படி யுனிசெப் உதவியுடனான வகுப்பறைக் கட்டட நிர்மாணத்தின் போது இவ் அதிபரினால் மேலதிக கொடுப்பனவாக ரூ. 210,240/- வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டினை அவர் ஏற்றுக் கொண்டு மாதாந்தம் ரூ.25,000/- செலுத்துவதற்கு சம்மதித்துள்ளார்.
இவ்வாறு குற்றம் செய்தவர் 1000 இற்குட்பட்ட மாணவர்களைக் கொண்ட சென் திரேசா பாடசாலையிலிருந்து 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அங்கும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். உலக உணவுத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு கொடுக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களின் கையாளுகை தொடர்பாக இவ்வதிபர் மீது மாவட்டச் செயலகக் கண்காணிப்பு அலகினால் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இவ் உலர் உணவு விடயம் தொடர்பாகத் தகவல் கொடுத்த ஆசிரியை பழிவாங்கப்பட்டு வலயக் கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே அதிபர்தான் அண்மையில் விளையாட்டாகத் தேங்காய் பிடுங்கிய மாணவர்களைப் பொலிசாரிடம் கையளித்த போது இப்பிரச்சினையைப் பாடசாலை மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ளுமாறு பொலிசார் கேட்டிருந்தும் அம்மாணவர்களை பொலிஸ் மூலம் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தியவரென்பதும் கவனிக்கப்படவேண்டியதாகும். இவ்வாறானவர்களைத்தான் கல்வி அமைச்சர் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்.
கல்வி அமைச்சர் அவர்களின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணைக் குழுவினால் கூறப்பட்டவற்றிற்கு மேலாகவும் என்னால் ஆதாரங்கள் சமர்ப்பிக்க முடியும். கிளிநொச்சியில் வலயக் கல்விப் பணிமனைக்கு கையளிப்புச் செய்யப்பட்ட 06 ஏக்கர் காணியில் ஒரு ஏக்கரினை ஜெயராஜா என்பவரிற்கு வழங்கும்படி கரச்சி பிரதேச செயலாளரிற்குக் கல்வி அமைச்சரினால் கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதன் பின்பு அதே ஜெயராஜிற்கு அரை ஏக்கரைக் கொடுங்களென இன்னொரு கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதன் பின்பு ஜெராஜிற்கு அரை ஏக்கரும், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயக் காணியில் அத்து மீறியிருக்கும் குடியிருப்பாளர்களிற்கு 02 பரப்பு வீதம் வழங்கி மீதிக் காணியினைக் கல்வி வலயத்திற்கு வழங்குமாறும் கல்வி அமைச்சரினால் கோரப்பட்டிருக்கின்றது. கல்வி அமைச்சரிற்குக் காணி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? வலயக்கல்விப் பணிமனைக்கு வழங்கிய காணியை பொதுமக்களிற்கு வழங்குமாறு பிரதேச செயலாளரைக் கோருவதற்கு கல்வி அமைச்சரிற்கு என்ன அதிகாரம் உண்டு. இதுவும் ஓர் அதிகார துஸ்பிரயோகமே.
அது மட்டுமல்ல கண்டாவளை வைத்தியசாலைக்குரிய காணியென நீமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் அதில் 03 ஏக்கரை 04 நபர்களிற்கு, அதுவும் அந்தக் காணியின் முன்பக்கமாக வழங்கும் வண்ணம் பிரதேச செயலரிற்குத் கல்வி அமைச்சரினால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நான் முன்பு கேட்டதனையே இங்கும் கேட்க விரும்புகின்றேன். காணி தொடர்பான விடயங்களை நீதிமன்றம் கையாளுகின்ற நிலையில் இது தொடர்பாக பிரதேச செயலாளரிற்கு எழுதுவதற்கு கல்வி அமைச்சரிற்கு என்ன அதிகாரம் உண்டு? இது அதிகார துஸ்பிரயோகம் இல்லையா?
முதலமைச்சர் அவர்கள் இவ் விசாரணைக் குழுவின் அறிக்கையை சபைக்குச் சமர்ப்பித்துக் கடந்த அமர்வின் போது உரையாற்றும் போது இவ் விசாரணைக்குழு அறிக்கையில் வவுனியா சேமமடு வீதியில் தான் சமூகமளிக்காத நிகழ்வொன்றில் சமூகமளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக அறிக்கையை நான் பரிசீலித்தபோது அதிற் கூறப்பட்டிருப்பதாவது ‘கௌரவ முதலமைச்சரும் இந் நிகழ்விற்கு சமுகமளித்துள்ளதாகப் பொதுமக்கள் விசாரணைக்குழுவிடம் நேரிற் தெரிவித்துள்ளனர்’ என்பதாகும்;. ஆதலினால் விசாரணைக்குழு தவறாகக் கூறியுள்ளதென்று கருதமுடியாது என்பது எனது கருத்தாகும்.
கடந்த அமர்வின் போது உரையாற்றிய கௌரவ உறுப்பினரொருவர் என்னை நோக்கி ‘ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுவதாக’ குறிப்பிட்டிருந்தார். அவர் இவ்வறிக்கையினை முழுமையாக வாசித்த பின்னராவது ‘ஆடு பல வீட்டுப் பயிர்களை உண்டதனாற்தான் இந்த ஓநாய் அழுதது’ என்பதனைப் புரிந்திருப்பாரென நினைக்கின்றேன்.
கௌரவ முதலமைச்சர் அவர்களே இவ் விசாரணைக்குழு அறிக்கை ஓர் முதன்மை ஆதாரச் சான்றுகள் தான் (Prima Facie Findings). ஒரு நிறுவனத்திற் பணியாற்றும் உத்தியோகத்தரிற்கெதிராக ஏதாவது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஆரம்ப விசாரணையில் முதன்மை ஆதாரச் சான்றுகள் (Prima Facie Findings) காணப்படின் முதலிற் செய்வது அவ்வுத்தியோகத்தரை இடைநிறுத்தம் செய்வது. அதன் பின்புதான் ஏனைய விசாரணைகள் நடைபெறும். ஆதலினால் இவ்விசாரணைக் குழுவின் அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டதற்கமைவாக அதில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள இரு அமைச்சரகளும் முதலிற் பதவி விலக்கப்படல் வேண்டும். அவர்களாகவே பதவியை இராஜீனாமா செய்வார்களேயானால் அது கௌரவமான பதவி நீக்கம். அப்படியில்லையேல் கௌரவ முதலமைச்சர் அவர்கள் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயமுள்ளது. அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதை இவ் அறிக்கையிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டியது கௌரவ முதலமைச்சர் அவர்களின் பொறுப்பு என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா