அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தீபா பேரவையினர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன் தனியாக இயங்கி வருகிறார்.
இதற்கிடையே எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தீபா, தொடங்கினார். இந்த பேரவை அ.தி.மு.க. ஜெ.தீபா அணியாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக அக்கட்சி சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டுள்ளது.
இதனை மீட்பதற்காக பிளவுபட்ட 2 அணிகளும் ஒன்றாக சேருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக ஓ.பி.எஸ். அணியும், சசிகலா அணியும் வரிந்து கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறது.
இரண்டு அணிகளை சேர்ந்தவர்களுமே இது தொடர்பான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க.வுக்கு தீபா அணியும் புதிதாக சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது.
ஜெ.தீபா தலைமையிலான அணியே உண்மையான அ.தி.மு.க. என்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தீபா பேரவையின் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் தலைமையில் பேரவை நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, ராமச்சந்திரன், வெங்கட் ஆகியோர் நேற்று மாலை விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றனர்.
52 ஆயிரம் பிரமாண பத்திரங்களையும் தீபா பேரவையினர் பார்சல்களாக கட்டி எடுத்துச் சென்றனர். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று காலை 11 மணி அளவில் இந்த பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், உண்மையான அ.தி.மு.க. தீபா தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.தான். இதனையே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும், பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் பிரமாண பத்திரங்களில் அடங்கியுள்ளன.
அ.தி.மு.க. பெயர், கட்சி கொடியை பயன்படுத்துவோர் உரிய அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் தீபா பேரவையினர் அறிவுறுத்தி உள்ளனர்.