எனது மகனை இராணுவத்தினர் சுட்டனர், வழக்குத் தொடர்ந்தேன் நீதி கிடைக்கவில்லை!

422 0

Symbol of law and justice in the empty courtroom, law and justice concept.

இந்திய இராணுவத்தினரால் எனது இரண்டு பிள்ளைகளை இழந்தேன், முள்ளிவாய்காலில் எனது மூன்றாவது மகனையும் இழந்துள்ளேன் என முல்லைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கான நல்லிணக்க ஆணைக்குழுமுன் ஒரு தந்தை முறையிட்டுள்ளதுடன் தனக்கு நீதி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது எனது மகன் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினரிடம் சென்றார். அவரை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். 6 மாதகாலம் நீதி கேட்டுப் போராடினேன். அரசாங்கத்துக்கெதிராக நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்து பிரயோசனமில்லை.யார் சுட்டார்கள் எனத் தெரியாது எனக் கூறி வழக்கை முடித்தால் நல்லது என எனது வழக்கறிஞர் ஆலோசனை வழங்கினார். அச்சுழலில் அவ்வாறான நிர்ப்பந்தத்தில் நானும் அவ்வாறே கூறினேன்.இதனால், எனது மகன் போரில் கொல்லப்பட்டார் என்று கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் என்ன நடந்தது என்பதற்கு சாட்சி இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் கொலை செய்த இராணுவத்தினர் நிரபராதியாகிவிட்டனர். எனது மகன் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதைப்போல் எத்தனையோ பிள்ளைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதற்கு சர்வதேச நீதிபதிகள் தலையிட்டு சரியான தீர்ப்பை வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.