காசிமேடு விசைப்படகு மீனவர்கள் தடை காலம் முடிந்த பிறகும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மறுத்து ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டுள்ளனர். காசிமேடு துறைமுகம் மிகப்பெரிய மீன் சந்தையாக உள்ளது. இதன் அருகே மீன் ஏல மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
இதற்கிடையே அதே பகுதியில் சிறிது தூரத்தில் ரூ.100 கோடி செலவில் புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதில் மீன் மார்க்கெட் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்கு மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய இடத்திலேயே மீன் மார்க்கெட் செயல்பட வேண்டும் என்று கூறி கோர்ட்டிலும் தடை உத்தரவு பெற்றனர்.
இதனால் மீன் வியாபாரிகள், விசைப்படகு மீனவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. புதிய கட்டிடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கூறி வந்தனர். தமிழகத்தில் 61 நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருந்த மீன்பிடி தடை நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தொடங்கினர்.
காசிமேடு விசைப்படகு மீனவர்கள் திடீரென கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மறுத்து ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டுள்ளனர். காசிமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திலேயே மீன் மார்க்கெட் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மீனவர்கள் போராட்டம் காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேடு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பைப்பர் படகு மற்றும் சிறிய படகுகளில் வழக்கம் போல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
விசைப்படகு மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடிப்பார்கள். தடைக்காலம் முடிந்ததால் பெரிய வகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வரும் எனவும், மீன் விலை குறையும் என்றும் மீன் பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது மீனவர்கள் போராட்டம் காரணமாக மீன் விலை குறைய வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
இது குறித்து சென்னை, செங்கை விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் அரசு கூறியதாவது:-
புதிய இடத்தில் மீன் மார்க்கெட் கட்டிடம் நவீன வசதிகளுடன் உள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான வியாபாரிகளும், பொது மக்களும் வர முடியும், குளிர்பதன கிடங்கு உள்ளது. உயர் தொழில் நுட்பத்தில் உள்ள இந்த இடத்தில் மீன் மார்க்கெட் இயங்க வேண்டும். அதுவரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
காசிமேடு மீன் பிடி துறைமுக மீன் வியாபாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறும் போது,”பழைய மீன் மார்க்கெட் 40 ஆண்டுக்கு மேலாக இங்கு செயல்பட்டு வருகிறது. போதிய இடவசதி உள்ளது. இங்கு மேற்கூரை அமைத்து நவீன வசதிகளுடன் இதே இடத்தில் மார்க்கெட் செயல்பட வேண்டும்.
புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட் கட்டிடத்தில் போதிய இடவசதி கிடையாது. வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. கூட்ட நெரிசலில் வியாபாரிகள், பொது மக்கள் கடலில் தவறி விழும் அபாயம் உள்ளது. பழைய இடத்திலேயே மீன் மார்க்கெட் செயல்பட வேண்டும்” என்றனர். இதையடுத்து விசைப்படகு மீனவர்கள், வியாபாரிகள் இடையே சமரச முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.