அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனைதான். மூன்றாவதாக அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை அது. நான்காவதாக விக்கினேஸ்வரனுக்கும் அது சோதனைதான்.
முதலாவதாக அது எப்படி தமிழ்த்தேசியத்திற்கு ஒரு சோதனையாக வந்திருக்கிறது என்று பார்க்கலாம். ஆட்சி மாற்றத்தின் பின் அம்மாற்றத்திற்குப் பங்காளியாக இருந்த கூட்டமைப்பானது அரசாங்கத்தோடு குறைந்தளவு எதிர்ப்பையும், கூடியளவு இணக்கத்தையும் பேணும் ஒரு நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. மகிந்தவின் காலத்தில் தன்னைப் புலிநீக்கம் செய்து கொண்ட கூட்டமைப்பானது ஆட்சி மாற்றத்தின்பின் தன்னைத் தமிழ்த்தேசிய நீக்கம் செய்து கொள்கிறதா என்ற கேள்வி இதனால் தான் எழுந்தது.
இவ்வாறு அரசாங்கத்தோடு கூடியபட்சம் இணங்கிப்போவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணலாம் என்று சம்பந்தரும், சுமந்திரனும் நம்புகிறார்கள். கடந்த சுமார் இரண்டாண்டுகளுக்கும் மேலாக யாப்புருவாக்கப் பணிகளிலும், போரின் விளைவுகளை எதிர்கொள்ளும் செயற்பாடுகளிலும் சம்பந்தரும், சுமந்திரனும் கூடுதலாக அரசாங்கத்தோடு இணங்கிப்போகும் ஒரு போக்கையே காண முடிகிறது.
ஆனால் விக்கினேஸ்வரன் இதற்குப் பெருமளவிற்கு எதிரான ஒரு போக்கைக் கடைப்பிடிக்கிறார். அவர் கூடுதலான எதிர்ப்பும், குறைந்தளவு இணக்கமும் என்ற ஓர் வழிமுறையை பின்பற்றி வருகிறார். இதனால் அவர் சம்பந்தரையும், சுமந்திரனையும் விட அதிகளவு ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக மேலெழுந்து விட்டார். அதேசமயம் சம்பந்தர், சுமந்திரன் அணியால் சுற்றிவளைக்கப்பட்ட ஒருவராகவும் காணப்படுகிறார். அவர் கடைப்பிடிக்கும் அரசியலைப் பொறுத்தவரை அவர் கஜேந்திரகுமாருக்கே கிட்டவாக வருகிறார். ஆனால் அவர் கஜேந்திரகுமாரோடு ஓர் அரசியல்கூட்டுக்குப் போகத் தயாரில்லை.
பதிலாக தமிழ்மக்கள் பேரவை போன்ற ஒரு பொது அரங்கில் கஜேந்திரகுமாருக்கும், தமிழரசுக்கட்சி அதிருப்தியாளர்களுக்கும் தலைமைதாங்கத் தயாராகக் காணப்படுகின்றார். ஒப்பீட்டளவில் அவருடைய அணி பலவீனமானதாகக் காணப்படுகின்றது. அவருக்கு எதிரான அணியோ மாகாணசபைக்குள்ளும், கட்சிக்குள்ளும், தென்னிலங்கையிலும், அனைத்துலக அரங்கிலும் பலமாகக் காணப்படுகின்றது. அந்த அணி அரசுகளால் பாதுகாக்கப்படுகிறது. அரச வளங்களோடும், அனுசரனைகளோடும் காணப்படுகின்றது.
விக்கினேஸ்வரனின் அரசியலை சோதனைக்குள்ளாக்குவதும் அவர் ஒரு மாற்று அணிக்குத் தலைமை தாங்குவதை தடுப்பதுமே அவருடைய எதிரணியின் செயற்திட்டமாகும். இச் செயற்திட்டத்தின்படியே அவருக்கு நெருக்கமான ஒரு அமைச்சரை நோக்கி குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இக்குற்றச்சாட்டுக்களையடுத்து ஏனைய அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. அதன் மூலம் விக்கினேஸ்வரனுக்கு நிர்வாகம் தெரியாது என்று நிரூபிப்பதே அவரை எதிர்ப்பவர்களின் நோக்கமாக இருந்தது.
விக்கினேஸ்வரனுக்கும் இது தெரியும். ஒரு தலைவராக அவர் அதை எதிர்கொள்ளவில்லை. மாறாக ஒரு நீதிபதியாகவே அவர் அதை எதிர்கொண்டார். தனது விசுவாசியும் உட்பட எல்லா அமைச்சர்களையும் விசாரிப்பது என்று முடிவெடுத்தார். ஆனால் விசாரணை முடிவுகள் அவருடைய விசுவாசியை பலியிட வேண்டிய ஒரு நிலமையை ஏற்படுத்தியிருக்கின்றன. நீதியை நிலைநாட்ட முற்பட்ட விக்கினேஸ்வரனுக்கு அந்த நீதியையே பொறியாக மாற்றியிருக்கிறது விசாரணைக்குழு.
இதை அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய மனஉளைச்சல், தனிமைப்படுதல், விரக்தி போன்றன அவருடைய தலைமைத்துவத்தை தளரச் செய்யுமா? அல்லது மிளிரச் செய்யுமா? என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தமிழ்த்தேசிய எதிர்ப்பரசியற் தடத்தை ஒப்பீட்டளவில் விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுத்த விக்கினேஸ்வரனுக்கு வந்த சோதனை எனப்படுவது அவர் முன்னெடுக்கும் அரசியலுக்கும் வந்த சோதனைதான். இது முதலாவது.
இரண்டாவது அது தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனை எனப்படுவது. 2009 மேக்குப் பின்னரான தமிழ் ஜனநாயகம் எனப்படுவது செழிப்பற்றதாகவும், முதிர்ச்சியற்றதாகவுமே காணப்படுகிறது. இக்காலகட்டத்திற்குரிய அரசியலின் தலைமைச் சக்தியாக கூட்டமைப்பே காணப்படுகிறது. கூட்டமைப்பு எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் குழந்தைதான். அதனை ஆயுதப் போராட்டத்தின் ஒரு ஜனநாயக நீட்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலம் புலிகளால் கொல்லப்படுதற்காகத் தேடப்பட்ட பலரும் பின்னாளில் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பாகும்.
ஒரு காலம் தங்களுடைய கொலைப்பட்டியலில் இருந்தவர்களை பிறகு ஒருகாலம் தங்களுடைய ஜனநாயக நீட்சியாக புலிகள் ஏற்றுக்கொண்டார்கள். புளட் இயக்கத்தைத் தவிர ஏனைய பெரும்பாலான எல்லா இயக்கங்களும் கூட்டமைப்பில் இணைந்தன. மிதவாதிகளும், முன்னாள் ஆயுதப் போராளிகளும் இணைந்துருவாக்கிய ஓர் அமைப்பு அது. இப்படிப்பார்த்தால் தமிழ்த்தேசிய அரசியலில் தோன்றிய முதலாவது சாம்பல்நிறத் தன்மைமிக்க ஒரு கட்சி அது.
ஆனால் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் அது தனது சாம்பல் நிறத்தன்மையை இழக்கத்தொடங்கிவிட்டது. தமிழரசுக்கட்சி கூட்டமைப்பிற்கு ஏகபோக உரிமை கொண்டாடத் தொடங்கியது. முதலில் புலிநீக்கம் செய்யப்பட்டது. அதன்மூலம் கஜேந்திரகுமார் அணி அகற்றப்பட்டது. அதன்பின் ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டன. கூட்டமைப்பு என்ற பெயரின்கீழ் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பலரும் பின்னாளில் தமிழரசுக்கட்சிக்குள் உறிஞ்சப்பட்டார்கள். ஏனைய கட்சிகளுக்கூடாக தேர்தலில் வென்றவர்களும் கூட பின்நாளில் தமிழரசுக் கட்சிக்குள் கரைத்துக்கொள்ளப்பட்டார்கள். இவ்வாறு தமிழரசுக்கட்சியானது ஏனைய கட்சிகளை விழுங்கி ஏகப்பெரும் கட்சியாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு சூழலில் கூட்டமைப்பு அதன் சாம்பல் நிறப்பண்புகளை இழந்து கொண்டே வருகிறது. எவ்வளவிற்கு எவ்வளவு கூட்டமைப்பு அதன் சாம்பல்நிறப் பண்புகளை இழக்கிறதோ அவ்வளவிற்கு அவ்வளவு அதன் உட்கட்சி ஜனநாயகப் பண்புகளையும் இழந்து வருகிறது என்றே பொருள்.
இவ்வாறான ஒரு காலச்சூழலில்தான் விக்கினேஸ்வரன் கொழும்பிலிருந்து பரசூட் மூலம் கட்சிக்குள் இறக்கப்பட்டார். சுமந்திரனைப் போலவே கொழும்பு மைய விக்கினேஸ்வரனையும் கட்சிக்குள் தலையெடுக்க வைப்பதன் மூலம் கட்சி மேல்மட்டத்தை அதிகபட்சம் கொழும்பு மையமாக மாற்றலாம் என்று சம்பந்தர் சிந்தித்திருக்கலாம். ஒரு தமிழ்க்கட்சி எவ்வளவிற்கு எவ்வளவு கொழும்பு மையத் தலைவர்களின் ஆதிக்கத்திற்குள் செல்கிறதே அவ்வளவிற்கு அவ்வளவு அது தமிழ்த்தேசியப் பண்புகளை இழக்கத் தொடங்கிவிடும்.
ஆனால் விக்கினேஸ்வரனோ சம்பந்தரின் எதிர்பார்ப்புக்களை தவிடு பொடியாக்கினார். ஆட்சி மாற்றத்தின் பின்னரான கூடியபட்ச இணக்க அரசியலுக்கு எதிராக கூடியபட்ச எதிர்ப்பரசியலை அவர் முன்னெடுத்தார். இதனால் கட்சிக்குள்ளேயே ஓர் எதிர்க்கட்சி போல அவர் தொழிற்பட்டார். இது எப்படிப்பார்த்தாலும் உட்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்தும் ஒரு திருப்பம்தான். இவ்வாறாக கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் கூட்டமைப்பின் உட்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்தி வந்தன.
விக்கினேஸ்வரன் நியமித்த விசாரணைக்குழுவும் அத்தகையதுதான். ஒரு தலைவர் ஒரு விடயத்தில் தனக்கு கூடுதலான விளக்கத்தைப் பெற வேண்டியிருப்பின் நிபுணர் குழுக்களையும், விசாரணைக் குழுக்களையும் அமைக்கலாம். அவை அரசியலை அதிகபட்சம் நிபுணத்துவப் பண்புடையதாகவும், அறிவியல்பூர்வமானதாகவும் மாற்றும். அதிகாரம் குறைந்த ஒரு மாகாணசபை அதுவும் வயதால் மிகவும் குறைந்த ஒரு வடமாகாணசபை, ஆளுநரோடும் உட்கட்சி எதிரிகளோடும் மல்லுக்கட்டும் ஒரு மாகாணசபை இப்படியொரு விசாரணைக்குழுவை அமைத்திருக்கிறது.
இது தமிழ் ஜனநாயகத்தின் செழிப்பைக் காட்டுகிறது. விக்கினேஸ்வரனின் தீர்ப்பு எப்படியும் அமையலாம். ஆனால் ஒரு விசாரணைக்குழுவை அமைத்ததென்பது தமிழ் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை ஒரு மகத்தான பரிசோதனையாகும். அதே சமயம் அது விக்கினேஸ்வரனை நெருக்கடிக்குள்ளாக்குகிறது என்ற அடிப்படையில் பார்த்தால் அது தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனையும்தான். அதாவது விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின்னரான அரசியல் நிலவரமானது ஒரு புறம் தமிழ் ஜனநாயகத்தின் முன்னுதாரணத்தையும் காட்டுகிறது. இன்னொரு புறம் அது தமிழ் ஜனநாயகத்தின் போதாமையையும் காட்டுகிறது. இது இரண்டாவது.
மனஉளைச்சல், தனிமைப்படுதல், விரக்தி போன்றன அவருடைய தலைமைத்துவத்தை தளரச் செய்யுமா? அல்லது மிளிரச் செய்யுமா? என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மூன்றாவது அது அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை என்பது. விசாரணைக்குழுவின் முடிவுகளை ஏற்றால் விக்கினேஸ்வரன் இரண்டு அமைச்சர்களையும் நீக்க வேண்டியிருக்கும். விசாரணைக்குழு பிழையென்று சொன்னால் அதை நியமித்த விக்கினேஸ்வரனின் பிழையே அது. எனவே அமைச்சர்களை நீக்காவிட்டால் அது விக்கினேஸ்வரனின் பிழையாகி விடும். அதே சமயம் முழு அமைச்சரவையையும் நீக்கினால் விக்கினேஸ்வரன் விசாரணக்குழுவின் பரிந்துரைகளை ஏற்கவில்லை என்று பொருள்படும். ஏனெனில் விசாரணைக்குழு இரண்டு அமைச்சர்களையும் குற்றமற்றவர்கள் என்று கருத்துக் கூறியுள்ளது. எனவே அமைச்சரவை முழுவதையும் மாற்றினால் அதன் பொருள் விக்கினேஸ்வரன் மறைமுகமாக தான் நியமித்த விசாரணைக்குழுவை தானே முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.
விசாரணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைகளைத்தான் செய்கிறது. அதுவே தீர்பாகிவிடாது. தீர்ப்பை விக்கினேஸ்வரனே வழங்க வேண்டும். இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் விக்கினேஸ்வரனின் தீர்ப்பு எது என்பது வெளியாகவில்லை. ஆனால் அமைச்சர்களுக்கு அந்தரங்கமாகக் கொடுக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கையானது ஓர் அமைச்சரால் வெளிக்கசிய விடப்பட்டது. குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் அவர். ஆனால் விக்கினேஸ்வரனுக்கு அவரைப் பிடிக்காது என்ற ஒரு தகவலும் உண்டு.
தன்னைக் குற்றமற்றவர் என்று கூறும் ஓர் அறிக்கையை அந்த அமைச்சர் ஏன் அவசரப்பட்டு வெளிக்கசிய விட்டார்? இங்கு அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு மீறப்பட்டிருக்கிறது. இது தமிழ் ஜனநாயகத்தின் வளர்ச்சிக்குறைவைக் காட்டுகிறது. இவ்வாறு கூட்டுப்பொறுப்பு மீறப்பட்டிருப்பதை விக்கினேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு முதலமைச்சராக அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் அவருக்கு முழு அதிகாரமுண்டு. எனவே கூட்டுப்பொறுப்பு மீறப்பட்டிருக்கும் ஒரு பின்னணயில் அவர் முழு அமைச்சரவையையும் கலைக்கும் ஒரு முடிவை எடுப்பாரா?
இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அமைச்சர்கள் அக்குற்றச்சாட்டுக்களுடன் பதவி விலகின் அது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். அவர்கள் மீதான குற்றப்பழி அவர்களுடைய தலைமுறைகள் மீதும் தொடர்ந்து வரும். எனவே குற்றப்பழியை நீக்க அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம் என்று மூத்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். இது மூன்றாவது.
நாலாவது அது விக்கினேஸ்வரனுக்கும் சோதனைதான் என்பது. தன்னை அதிகபட்சம் ஒரு நீதிபதியாகவே காட்டிக்கொண்ட ஒருவர் தன்னை ஒரு தலைவராக நிறுவ வேண்டிய சோதனைக்காலம் இது. தமிழ் மக்களுக்கு நீதி தவறாத நீதிபதிகள் தேவைதான். அதைவிடக் கூடுதலாக துணிந்து முடிவுகளை எடுக்கும் தலைவர்களும் தேவை. தமிழ்மக்களுக்கு மனுநீதி கண்ட சோழர்களும் தேவைதான் மண்டேலாக்களும் தேவைதான். விக்கினேஸ்வரன் ஒரு தலைவராக தன்னை செதுக்கிக் கொள்ளத் தவறினால் சில சமயம் ஒரு நீதிபதியாக அரசியலை விட்டு ஒதுங்க வேண்டியும் வரலாம். அவரை எதிர்ப்பவர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். அவர் மனம் நொந்து அரசியலை விட்டு விலகினால் அது உடனடிக்கு தமிழ்த்தேசிய எதிர்ப்பரசியலை மெலியச் செய்துவிடும்.
அவருக்கு அடுத்தபடியாக அவரைப் போன்ற ஜனவசியம் மிக்க எவரும் இப்பொழுது அரங்கில் இல்லை. 2009 மேக்குப்பின் ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிகம் ஜனவசியம் கொண்ட ஒரு தலைவராக எழுச்சிபெற்ற ஒருவர் அதிகம் துணிச்சலும், தந்திரமும் மிக்க ஒரு தலைவராக செயற்படவில்லை என்பது ஈழத்தமிழர்களுக்கு இழப்புத்தான்.
விக்கினேஸ்வரன் இளவயதில் குத்துச்சண்டை பயின்றவர். பல மாதங்களுக்கு முன்பு மாகாணசபைக்குள் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவரோடு மோதல் அதிகரித்த பொழுது அவர் மனமுடைந்து காணப்பட்டாராம். “நான் ஒரு குத்துச்சண்டை வீரன். அன்பாகக் கேட்டால் இந்தப் பதவியை நான் விரும்பிக்கொடுத்து விட்டு; விலகிவிடுவேன். ஆனால் அவர் எனது முகத்தில் குத்த முயன்றால் நான் விடமாட்டேன்.” என்ற தொனிப்பட அவர் தன்னோடு பழகும் சிலருக்கு கூறியதாக ஒரு தகவல் உண்டு.
இத்தகவல் உண்மையாக இருந்தால் விக்கினேஸ்வரன் ஒரு குத்துச்சண்டை வீரனைப் போல முஸ்டியை முறுக்கிக் கொண்டு துள்ளியெழ வேண்டிய காலகட்டம் இது.