சோமாலியாவில் உள்ள உணவகம் மீது தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.
சோமாலிய தலைநகர் மொகதீசுவில் உள்ள பிரபல உணவு விடுதியின் வாசலில் நின்ற கார் குண்டு மூலம் நேற்று நள்ளிரவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலை தொடர்ந்து ராணுவ உடையுடன் உணவு விடுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உணவு விடுதியில் மக்கள் பலர் பிணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். தாக்குதலில் 9 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று, உணவகத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரை நோக்கி தீவிரவாதிகள் மேல்தளத்தில் இருந்து தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசார் தரைத்தளம் வழியாக உள்ளே நுழைந்து தீவிரவாதிகளை நேருக்கு நேர் சந்தித்தனர்.
இந்த சண்டையில் தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். விடிய விடிய நடந்த சண்டை இன்று காலையில் முடிவுக்கு வந்தது. அப்போது உயிரிழப்பு 31 ஆக அதிகரித்திருப்பதாகவும், சுமார் 40 பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோமாலியாவில் புதிய அரசு பதவியேற்று, புதிய ராணுவ அமைப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.