லண்டன் தீ விபத்தில் உயிரிழப்பு 17 ஆக அதிகரிப்பு

328 0

லண்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக்  குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எனவே வேகமாக பற்றி எரிந்த தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியது.

அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி 12 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 5 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தீ விபத்தில் உயிரிழபுப 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு இன்று தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் தீயில் கருகிய கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் உயிர்பிழைத்திருப்பதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தெரசா மே இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் எரிந்ததால் வீடுகளை இழந்து பரிதவித்த மக்கள், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த பிரபல பாடகி அடீல் தன் கணவருடன் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாடகி ரீட்டா ஓராவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நன்கொடைகளாக வழங்கப்பட்ட ஏராளமான பொருட்களை வகைப்படுத்தி விநியோகம் செய்வதற்கும் ரீட்டா உதவி செய்தார்.

Leave a comment