முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து அக்காணிகளை நிரந்தரமாக கடற்படையினருக்குச் சொந்தமாக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், காணி அபகரிப்பை எதிர்த்து இன்று (புதன்கிழமை) காலை 9.00 மணிக்கு காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது அமைப்புக்கள் மட்டுமன்றி தமிழ்த் தேசத்திலுள்ள அனைத்து பொது அமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களுடன் கரம்கோர்த்து நில ஆக்கிரமிப்புக்கு எதிரான குரலை வலுப்படுத்த முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நில அபகரிப்பானது முள்ளிவாய்க்கால் மக்களுக்கு மட்டுமானதல்ல எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளது.