நொய்டா, புலந்த்சாஹர் பாலியல் பலாத்கார பாதிப்பு குடும்பத்தினர் குற்றவாளிகளை 3 மாதத்திற்குள் தண்டிக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த வாரம் தங்களது உறவின ரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக ஷாஜஹான்பூருக்கு காரில் சென்றனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் டெல்லி கான்பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாஹர் என்ற இடத்தில் அவர்களது காரை கொள்ளை கும்பல் வழிமறித்தது. பின்னர் காரில் இருந்த இரு ஆண்களை கயிற்றால் கட்டிவிட்டு, தாயையும் (35) அவரது 14 வயது மகளையும் ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.
இது தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்து நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் தந்தை கூறியதாவது: “நாங்கள் கொள்ளையடிக்கப்பட்டோம், அடித்து உதைக்கப்பட்டோம், என்மகளுக்கு அவர்கள் என்ன கொடுமையைச் செய்தனர் என்று நாம அனைவரும் அறிவோம். என் மனைவியும் மகளும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் 3 மாதங்களுக்குள் தண்டிக்கப்படவில்லையெனில் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்றார்.
“அவர்கள் 7-8 பேர் இருக்கும். அவர்கள் எங்களை கட்டிப் போட்டு அடித்துத் துன்புறுத்தினர். நாங்கள் குடிக்கத் தண்ணீர் கேட்ட போதும் இரக்கமில்லாமல் எங்களை அடித்து துன்புறுத்தினர்” என்று அவர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் திங்களன்று சதீஷ் (25), பாபு (22), ரெய்ஸ் (28) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் 12 பேரை இது தொடர்பாக விசாரிக்க கைது செய்துள்ளனர்.
எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனத்தில் இறங்க மாநில அரசு 5 போலீஸ் உயரதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் பலாத்கார மாநிலமாக திகழ்கிறது சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது, முதல்வர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கூக்குரலிடத் தொடங்கியுள்ளன.
மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவரை தேசிய மகளிர் ஆணையம் அழைத்துள்ளது. காரணம் அந்த மருத்துவர் சிறுமியிடம் தாறுமாறான சில கேள்விகளை கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் 3 மாதத்தில் குற்றவாளிகளை கைது செய்யவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிறுமியின் தந்தை அச்சுறுத்தியுள்ளார்.