தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது

369 0

Venkaiah_2956249f_2956298fபசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
தலித்துகள் பவுத்த மதத்தை தழுவ வேண்டும் என்று ராம்தாஸ் அதவாலே தெரிவித்ததையடுத்து அவருக்கு பதில் அளிக்கும் விதமாக வெங்கய்ய நாயுடு கூறும்போது, ‘மதமாற்றம் தலித்துகளுக்கு எதிரான முற்கோள்களை மாற்றாது” என்றார்.

“சக மனிதனிடம் பாகுபாடு காட்டும் எந்த ஒரு மனிதனும் இந்துவாக இருக்க முடியாது. பசுவுக்கு மரியாதை அளிக்கிறீர்கள் இது நல்ல விஷயம் என்றாலும் பிற மனிதர்கள் வாழ்வதற்கு உரிமை உள்ளதை மறுப்பது நியாயமாகாது. பசுவுக்கு மரியாதை சரி, ஆனால் அதன் பெயரில் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்பது முற்றிலும் தவறு.

அதற்காக மதமாற்றம் தீர்வாகாது. மதம் மாறிய சிலர் திரும்பவும் வந்து கூறும்போது அந்த மதத்திலும் நிலைமை வேறாக இல்லை என்று கூறுவதையே பார்க்கிறோம். மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு நமது அரசியல் சாசனத்தில் இல்லை, தற்போது அவர்கள் இதனை நினைத்து வருந்துகின்றனர், புகார் தெரிவிக்கின்றனர்.

பாரத் மாதா கி ஜெய் என்பது நாட்டில் வாழும் அனைவரது நன்மையையும் குறிப்பதாகும், இந்த நாட்டில் வாழ்பவர்கள் இந்தியர்கள், அனைத்து விதங்களிலும் இவர்கள் சமமானவர்களே” என்றார் வெங்கய்ய நாயுடு.

கடந்த வாரம் கரூர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள மறுக்கப்பட்ட தலித் குடும்பத்தினர் இஸ்லாமுக்கு மாறுவதாக எழுந்த செய்திகளை அடுத்து வெங்கய்ய நாயுடு மதமாற்றம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.