மகாத்மா காந்தியின் படத்தை மாற்றவோ, பிற தலைவர்களின் படத்தையும் ரூபாய் நோட்டில் வெளியிடவோ அரசு திட்டம் எதுவும் வைத்துள்ளதா?’ என டெல்லி மேல்-சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
ரூபாய் நோட்டுகளில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. பிற எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில், ‘மகாத்மா காந்தியின் படத்தை மாற்றவோ, பிற தலைவர்களின் படத்தையும் ரூபாய் நோட்டில் வெளியிடவோ அரசு திட்டம் எதுவும் வைத்துள்ளதா?’ என டெல்லி மேல்-சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம்மேக்வால் பதில் அளிக்கையில், “இது தொடர்பாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, மகாத்மா காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் மாற்றத் தேவையில்லை என முடிவு எடுத்து விட்டது” என குறிப்பிட்டார்.
“இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த ரூபாய் நோட்டு அல்லது நாணயம் வெளியிடப்படுமா?” எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மந்திரி அர்ஜூன் ராம்மேக்வால், “இதையொட்டி அரசாங்கம் ஏற்கனவே புழக்கத்தில் விடாதவகையில் ரூ.125 நாணயம் வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி புழக்கத்துக்காக வெளியிட்டார்” என பதில் அளித்தார்.
கேள்வி நேரத்தின்போது, ‘பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வெளியிடப்படுமா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி பதில் அளித்தார். அப்போது அவர், “சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வெளியிடுவதற்காக பிளாஸ்டிக் மூலப்பொருளை டெண்டர் விட்டு கொள்முதல் செய்ய ரிசர்வ் வங்கி தீர்மானித்திருக்கிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என பதில் அளித்தார்.