தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டன. அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கக் கூடிய அம்சங்கள் பற்றி ஏற்கனவே பட்டியலிடப்பட்டு இருந்தாலும், பட்டியலில் இல்லாத சில அம்சங்களும் அங்கு விவாதிக்கப்பட்டன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை குறைப்பதற்கான விவாதம், அமைச்சரவையில் நீண்ட நேரம் நடந்தது. இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டியதிருப்பதால், வழிகாட்டி மதிப்பை குறைப்பதற்கு அமைச்சரவையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும், இதுதொடர்பாக அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு, அங்கீகரிக்கப்படாத நிலங்களை பதிவு செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு மற்றும் அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவையும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
சரக்கு சேவை வரிக்கான (ஜி.எஸ்.டி.) மாநில அரசின் வரைவு மசோதா தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஜூன் மாதம் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையில் அ.தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் உச்சகட்டத்தில் இருந்தது. எனவே நிலத்தின் சந்தை மதிப்பும் கடுமையாக உயர்ந்ததோடு, அதற்கான விற்பனை பத்திரம் உள்ளிட்ட பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பீடும் ஏகத்துக்கும் ஏற்றம் கண்டது. வழிகாட்டி மதிப்பீட்டை வைத்துதான் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிட்டது. அதுபோல நிலத்தின் சந்தை மதிப்பும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஆனால் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு மட்டும் உச்சத்தில் இருக்கிறது. எனவே பெரும்பாலானோர் அந்த அளவு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பத்திரப் பதிவு செய்ய விரும்பவில்லை.
இந்த நிலையில்தான் வழிகாட்டி மதிப்பை குறைப்பதன் மூலம் பத்திரப்பதிவை அதிகரிக்க முடியும் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.