நுவரெலியா ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்(காணொளி)

273 0

 

நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக பன்மூர் குளத்தின் வெள்ள நீர் 4 வீடுகளுக்குள் இன்று அதிகாலை புகுந்ததுள்ளது.

இதன் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட 19 பேர் தற்காலிகமாக அத்தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று மாலை முதல் மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் சுமார் 56 மில்லிமீற்றர் மழை வீழச்சி பதிவாகியுள்ளது.

இதனால் பல குளங்களினதும் நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் கனிசமான அளவில் உயர்ந்துள்ளது.

பன்மூர் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதேவேளை பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், அணைக்கட்டு எந்த வேளையிலும் உடைந்து ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை தொடருமானால் பன்மூர் குளத்தின் நீர் அதிகரித்து அணைக்கட்டு உடைந்தால் பன்மூர், அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.