’உங்களோட தொந்தரவா போச்சு’ – அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்

258 0

மான்செஸ்டர் குண்டு வெடிப்பின் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானதால் இங்கிலாந்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி கடந்த புதன் நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மான்செஸ்டர் தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் இயக்கத்தினர் அறிவித்தனர். இத்தாக்குதலுக்கு முக்கிய காரணமான தற்கொலைப்படை தீவிரவாதி 22 வயதான சல்மான் அபேதி என அறிவித்த போலீசார், இதில் தொடர்புடைய  7 பேரை கைது செய்துள்ளனர்

குண்டுவெடிப்பின் போது அந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்கமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த இங்கிலாந்து, விசாரணை நடைபெறும் போது இத்தகைய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும், ‘இது அமெரிக்காவின் நம்பிக்கை துரோகம்’ எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது மீண்டும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் குற்றச்சாட்டால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள டிரம்ப், ஊடகங்களின் இந்த செயல்கள் மிகுந்த தொந்தரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.