‘பனாமா கேட்’ ஊழலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதில் அளிப்பதற்காக கேள்விப்பட்டியல் ஒன்றை கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பி வைத்துள்ளது.
பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் வரிஏய்ப்பு செய்வதற்காக பல்வேறு நாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது.
‘பனாமா கேட்’ என அழைக்கப்படுகிற இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கலானது. பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் தொடுத்த வழக்கை நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா, குல்சார் அகமது, இஜாஸ் அப்சல்கான், அஜ்மத் சயீத், இஜாஜூல் அசன் விசாரித்தனர். விசாரணை முடிவில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த மெஜாரிட்டி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு புலனாய்வுக்குழுவின் 2 உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நவாஸ் ஷெரீப்பின் மகன்களில் ஒருவரான உசேன் நவாஸ், சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இந்த முறையீட்டின் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடக்க உள்ளது.
கூட்டு புலனாய்வுக்குழு ஏற்கனவே நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உறவினர் மியான் தாரிக் சபி, தேசிய பொறுப்புடைமை அமைப்பின் முன்னாள் தலைவர் முனீர் ஹபீஸ், பத்திரிகையாளர் உமர் சீமா ஆகியோரின் வாக்குமூலங் களை பதிவு செய்திருக்கிறது.இந்த நிலையில், கூட்டு புலனாய்வுக்குழுவின் தலைவர் வாஜித் ஜியா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ் ஆகியோருக்கும் கடிதம் எழுதி உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடிதத்தில் நவாஸ் ஷெரீப்பும், அவரது மகன்களும் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்து தருமாறு வாஜித் ஜியா கேட்டுள்ளார் என கூட்டு புலனாய்வுக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ‘டான்’ இணையதளம் கூறி உள்ளது.
ஆனால் அவர்கள் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்து தருவதற்கு முன்னால் கூட்டு புலனாய்வுக்குழு தயாரித்து அனுப்பியுள்ள கேள்வி பட்டியலுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.அந்த பட்டியலில் மொத்தம் 13 கேள்விகள் இடம்பெற்றுள்ளனவாம். ஜெட்டாவில் நவாஸ் ஷெரீப் மகன்கள் புதிய உருக்கு உற்பத்தி தொழிலை தொடங்கியது எப்படி என்பது உள்ளிட்ட கேள்விகள் அதில் அடங்கி இருக்கின்றனவாம்.
இதற்கிடையே கூட்டு புலனாய்வுக்குழுவின் விசாரணையை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி நவாஸ் ஷெரீப்பும், அவரது மகன்களும் வக்கீல்களை கலந்து ஆலோசிக்க தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுவரை அந்த வகையில் 4 மூத்த வக்கீல்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.