ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினரை குறிவைத்து கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 105 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக வந்த தகவல்களை பெண்டகன் உறுதி செய்துள்ளது.
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த முக்கிய நகரமான மொசூல் நகரை மீட்பதற்காக கடந்த மார்ச் மாதம் ஈராக் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்த படையினர், தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். வட மேற்கு நகரங்களை தங்கள் வசம் வைத்துள்ள தீவிரவாதிகளை வான்வெளி தாக்குதல் மூலம் அழிக்கும் பணியை கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுத்து செல்கின்றனர்.
அப்போது, மயாதீன் என்ற பகுதியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். அவர்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல்களை அமெரிக்க படை தொடுத்தது. அப்போது, அந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் வசித்து வந்த 105 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் வெளியான தகவல்களில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க ராணுவ தலைமையகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வான்வெளி தாக்குதலில் தான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பெண்டகன் நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை இதே போன்ற வான்வெளி தாக்குதலில் வடக்கு சிரியாவில் உள்ள நகரங்களில் உள்ள 35 பொதுமக்கள் பலியானதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.