தமிழினவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்த துன்பத்தை தேசியமயமாக்கும் சிங்களம்! – இரா.மயூதரன்!

411 0

இருகோட்டு தத்துவத்தின் வழியே தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியின் நீட்சியே யாழ் கட்டளைத் தளபதியின் அண்மைய பேச்சாகும்.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் வடக்கு கிழக்கு மக்களை மட்டும் துன்பப்படுத்தவில்லை. நாமும் துன்பப்பட்டோம் என்று யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சி முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

1948 பெப்ரவரி-04 இற்குப் பின்னரான இலங்கைத் தீவின் வரலாற்றில் எடுத்து விரிக்கும் பக்கமெல்லாம் தமிழர்களின் இரத்தமும் சதையுமாக விரவிக்கிடக்கையில் அதை மூடிமறைக்கும் முயற்சியில் சிங்களம் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகின்றது.

துன்பத்தின் அரிச்சுவட்டில் நின்றுகொண்டு அழித்தொழிப்பின் அடியாளம் கண்ட தமிழர்களின் துன்பத்துடன் தமது துன்பத்தை ஒப்பிடுவதன் மூலம் தமிழின அழிப்பு வரலாற்றை சிறுமைப்படுத்திவிடலாம் என்று நினைத்தே 2009 இற்குப் பின்னரான நிகழ்வுகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது.

வெலிவேரிய நகரில் சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் இந்தப் பின்னணியிலேயே ஊதிப்பெரிதாக்கப்பட்டது. இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்திருந்த இச்சமவத்தை சிங்களத் தரப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வரை கொண்டுசென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2013 நடுப்பகுதியில் நடந்த இந்தச் சிறு அசம்பாவிதம் குறித்து, மக்கள் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டிருந்த கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 2009 மே-18 இற்குப் பின்னரும் தமிழர்கள் மீது தொடர்ந்துவரும் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து வாய்திறக்காதிருக்கின்றமை அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

யாழ் கட்டளைத் தளபதிக்கு முன்னரும் சிறிலங்கா அரச தரப்பு பிரமுகர்கள் இவ்விடயத்தை அவ்வப்போது பேசியே வந்துள்ளார்கள். அதற்கு ஏற்றாற்போல் சம்பவங்களை திட்டமிட்டு உருவாக்கி அதன் பின்னணியிலேயே துன்பத்தை தேசியமயமாக்கும் முயற்சிகள் கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இசுலாமியர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களும் இந்தப் பின்னணியிலேயேதான் அவ்வப்போது திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவது, இசுலாமியர்களுக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற அத்துமீறல் சம்பங்கள் சிங்கள காடையர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

சிங்களத்தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனோர் தொடர்பான போராட்டமும் இதன் தொடர்ச்சியே. சிங்களத்தரப்பில் நடைபெற்ற காணாமல்போதல் சம்பவங்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களே காரணமாகும். சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் அடிப்படையிலான ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டு கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தினரின் உண்மையான தொகையை சிறிலங்கா அரசு என்றுமே வெளிப்படையாக அறிவித்ததில்லை.

அதிகப்படியான இராணுவத்தினரின் மரணத்தை வெளிப்படையாக அறிவித்தால் சிங்கள மக்களிடையே போருக்கெதிரான மனநிலை உருவாகிவிடும் என்பதனால் கொல்லப்படும் இரானுவத்தினரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தே வெளியிட்டுவந்தது சிறிலங்க அரசு.

முல்லைத்தீவு பெருந்தளத்தினை தமிழர் சேனை கைப்பற்றிய ஓயாத அலைகள்-1 தாக்குதலில் 1200 இற்கு அதிகமான சிங்கள இராணுவத்தினர் பலியாகியிருந்தார்கள். அவ்வாறு பலியான இராணுவத்தினரின் நல்ல நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான சடலங்களை பொதி செய்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஒப்படைக்க புலிகள் முயற்சித்த போது சிறிலங்கா அரச தரப்பு வாங்க மறுத்தது.

இந்த தாக்குதலில் 50 இற்கு மேற்பட்டவர்களே உயிரிழந்ததாகவும் மற்றவை எல்லாம் புலிகளுடைய சடலங்களே என்று கூறியது சந்திரிக்காவின் அரசு. காரணம், ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினரின் இழப்பை ஏற்றுக்கொண்டிருந்தால் அதன் தாக்கம் சிங்கள தேசம் முழுமைக்கும் பரவியிருக்கும். ஒரே நேரத்தில் சிங்கள தேசமெங்கும் உயிரிழந்த இராணுவத்தினரின் உறவினர்களின் அழுகையொலி எழுப்பப்பட்டிருந்தால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்புப் போர் முன்னெடுப்புக்களுக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டினை அது வலுவடையச் செய்திருக்கும் என்பதாலேயே மூடி மறைக்கப்பட்டது.

இறுதியில் கொக்காவில் பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் 600 இற்கு மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை உரிய மரியாதையுடன் புலிகள் தீமூட்டி எரித்திருந்தார்கள். இதே போன்றே சிதைவடைந்த இராணுவத்தினரின் சடலங்களும் ஆங்காங்கே உரிய மரியாதையுடன் தீமூட்டி எரிக்கப்பட்டிருந்தது. இதே நிலைதான் இறுதிவரை நீடித்து வந்தது.

இவ்வாறு பலியாகி வெளிப்படையாக அறிவிக்கப்படாத இராணுவ வீரர்கள் போரின் போது காணாமல்போனவர்களாக சிறிலங்கா அரசால் அறிவிக்கப்பட்டார்கள். இந்த அறிவிப்பின் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் இன்றும் தமது பிள்ளைகள் உயிரோடு இருப்பதாகவே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, கோத்தபாய ராசபக்சே தலைமையில் நடத்தப்பட்ட வெள்ளை வான் கடத்தல்களின் மூலம் காணமல் ஆக்கப்பட்ட சிங்களர்களைத் தேடியும் அவர்களின் உறவினர்கள் இன்றும் போராட்டங்களை நடத்திவருகின்றார்கள். ஆனால் இவை எதற்கும் தமிழர்களோ தமிழர்களின் சுதந்திர வாழ்விற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலை போராட்டமோ ஒருபோதும் காரணமாகாது.

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு என்பார்கள். அந்த வகையிலாவது குறைந்தபட்ச எதிர்விளைவுகளைக்கூட சிங்களத்தரப்பு சந்திக்காமைக்கு தமிழர் தரப்பின் அறம்சார்ந்த நிலையே காரணமாகும். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் காத்துநின்ற அறம்சார் பேரமைதியே சிங்கள தேசத்தின் இருப்பின் அடிப்படையாகும்.

கிளிநொச்சி நகரின் கட்டிடங்களையும் அங்கு நடமாடிய கால்நடைகளையும் வெற்றுக்கண்களால் பார்க்கும் தொலைவில் நின்ற போதிலும் ஒரு அங்குலமேனும் முன்னேற முடியாது முக்கித்தவித்த சிங்களப்படை கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலாற நடந்துவந்தமை புலிகளின் பின்வாங்கிச் செல்லும் முடிவின் பின்னணியில் நடந்ததே தவிர சிங்கள இராணுவ பலத்தினால் அல்ல என்பதை உணர்ந்துகொள்வது அவசியம்.

கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளை தக்கவைத்து போரைத் தொடரவேண்டுமென தேசியத் தலைவர் நினைத்திருந்தால் இன்று கூட கிளிநொச்சி புலிகளின் கோட்டையாகவே நீடித்திருக்கும். அதற்கு பெரிதாக எதையும் செய்திருக்க வேண்டியதில்லை. சில சிங்களக் கிராமங்களை முள்ளிவாய்க்கால் ஆக்கியிருந்தாலே போதும் அது தன்னாலே நடந்திருக்கும்.

ஆனால் அறத்தின் வழியே விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தேசியத் தலைவர் அதனை முற்றிலும் தவிர்த்தே இருந்தார். தென் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த தளபதிகள் இதை வலியுறுத்திய போதிலும் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவிக்கும் அந்த நொடிவரை அதற்கான அனுமதியை வழங்கியிருக்கவில்லை தலைவர் அவர்கள்.

தேசியத் தலைவரின் கருணையால் சிங்கள தேசம் எதுவித சேதாரமும் இன்றி தப்பித்து இருக்கின்றது. போர் தவிர்ப்பு ஒப்பந்த காலத்தைப் போன்று ஆயுத மௌனிப்பு காலமும் இறுதிவரை தமிழினத்தின் அழிவுக்கு மத்தியில் கடந்துவிடும் என்று யாரும் மனப்பால் குடித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

அது சரி… சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மண்ணாசையின் வெளிப்பாடாய் உருவான இன அழிப்பு யுத்தத்தை நடத்தியது நீங்கள்தானே…?

• கிருசாந்திக்கு நீங்கள் செய்த கொடூரத்தைப் போன்று ஒரு சிங்களச் சகோதரிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏன் தமிழர்களால் செய்யப்பட்டதா…?

• பாதுகாப்பான இடமென்று அறிவித்து ஒன்றுகூட வைத்து நவாலி சென் பீற்றர் தேவாலையத்தில் நீங்கள் நடத்திய நரபலியை தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள தேசத்தில் நடத்தியதுண்டா…?

• வெண் சிட்டுக்களாய் பள்ளி வளாகத்தில் சிறகடித்துப் பறந்த சிறார்களை நாகர்கோவில் மகாவித்தியாலத்தின் மீதான விமானக் குண்டு வீச்சில் படுகொலை செய்தீர்களே… புலிகளிடமும் விமானங்கள் இருந்த நிலையில் அவ்வாறு செய்தார்களா…?

• செம்மணியில் நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்று புதைத்தீர்களே… சிங்கள தேசத்தில் அவ்வாறு புதைகுழிக்குள் சிங்களர்கள் புதைக்கப்பட்டார்களா…?

• சிங்கள தேசத்தில் எங்கேனும் ஓர் செஞ்சோலை படுகொலை நடந்ததுண்டா…?

• கால் நூற்றாண்டுகள் கடந்து சொந்த நிலத்தை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அல்லாடிக் கொண்டிருக்கும் எமது மக்களைப் போல் சிங்கள மக்கள் அலைகிறார்களா…?

• குறைந்தபட்சம் அகதி வாழ்வின் வலிகளையாவது சிங்கள மக்கள் அறிவார்களா…?

இன்னூம் ஏராளம் ஏராளம் ரணங்கள் சுமந்தே தமிழர்களாகிய நாம் எமது சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். தமிழர்களது சுதந்திர வாழ்விற்கும் பாதுகாப்பான இருப்பிற்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்து நின்ற சிறிலங்கா இராணுவத்தினர், ஆயுத தளபாடங்கள், இராணுவ முகாம்கள் போன்றவையே தமிழீழ விடுதலைப் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. அதைக்கடந்து அப்பாவி சிங்கள மக்கள் மீதோ அவர்களது உடமைகள் மீதோ புலிகளின் தாக்குதல்கள் நடத்தப்பட்டதேயில்லை.

இருந்தும் தமிழர்களின் அழிவை தமது வெற்றியாகவே சிங்கள மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையானது சிங்கள தேசத்து கூட்டுமன உணர்வாக பலம்பெற்று நிற்பதே இலங்கைத் தீவானது இரு தேசங்களாக பிரிந்தேயாக வேண்டும் என்பதை இடித்துரைத்து நிற்கிறது.

கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழர்களாகிய நாம் அனுபவித்து வரும் கொடுமைகளின் நிழலில் கூட உங்களால்(சிங்களர்களால்) ஒரு நொடியேனும் நிற்கமுடியாது. புலி வருது… புலி வருது… கதையாக சிங்கள தேசம் முள்ளிவாய்க்காலை சந்திக்கும் முன்னரே எமக்கான நியாயமான தீர்வை வழங்குவது எல்லோருக்கும் நல்லது.

தேசியத் தலைவர் கூறியதைப் போன்று தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில் சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பொய் வாக்குறுதிகளை அள்ளிவழங்கி காலத்தை இழுத்தடித்து ஏமாற்றும் தந்திரத்தையே மாறி மாறி சிங்கள தேசத்தை ஆட்சி செய்யும் தலைவர்கள் கையாண்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் நாடத்தப்பட்ட தமிழினவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்த துன்பத்தை தேசியமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் இந்த ஆட்சியிலும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

இரா.மயூதரன்.
(25/05/2017)