ரத்துபஸ்வலயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள கட்டளையிட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பிரிகேடியர் அனுர தேசப்ரிய குணவர்த்தன எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுத்தமான குடிநீரை கோரி ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு கட்டளையிட்டதாக கூறப்படும் பிரிகேடியர் அனுர தேப்ரிய குணவர்த்தன, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், அவர் இன்று மாலை கம்பஹா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரிய நகரத்தில் ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூன்று பேர் பலியாகினர்.
சம்பவத்தில் 33 பேர் வரை காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.