சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவுமே போர்க்குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கெதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண மக்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் குழுவினரிடமே வடக்கு மாகாண மக்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, இறுதி யுத்தத்தில் சிறீலங்காப் படையினரால் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள். அந்த மக்களின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் மகிந்தவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுமே.
எனவே, இவர்களைத் தண்டிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடாத்தவேண்டுமெனவும், இவ்வாறானவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் நாட்டில் இனவாதம் ஒழிந்து நல்லிணக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.