நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டன.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவந்தார்.
இதில் உரையாற்றியபோதே அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில வாரங்களாக சில சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டினார்.
இந்த சக்திகளின் பின்னணியில் இருந்து செயற்படுவபர்கள் யார்? அவற்றுக்கு நிதி வழங்குவது யார்? இதன் முடிவு என்ன என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்து வெளியிட வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
இதையடுத்து, உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்.
அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ வேண்டும்.
எனினும், நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் இடம்பெற்ற சில சம்பவங்களின் காரணமாக மக்கள் அச்சமடையும் நிலைமை ஏற்படுகின்றது.
எனவே, இந்த நிலைமை தொடர இடமளிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் இடம்பெற்ற விடயங்கள் மீண்டும் இடம்பெறாமலிருக்க வேண்டும்.
எனவே, அரசாங்கம் இதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
அண்மைய சில காலங்களாக குறுகிய அரசியல் நோக்கத்துக்காக சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
இது அனைவருக்கும் உகந்ததொரு விடயமல்ல.
கடந்த ஏப்ரல் மாதம் 16 முதல் தற்போதுவரை வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 20 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இந்த வெறுப்புணர்வு சம்பவங்கள் குறித்து சில ஊடகங்கள் குறிப்பாக சிங்கள பத்திரிகைகளில் விரிவான அறிக்கைப்படுத்தலை வழங்குவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக கொஹிலவத்தை பள்ளிவாசல் தாக்குதல் மற்றும் பாணந்துறை வர்த்தக நிலையம் சம்பவம் தொடர்பாக சிங்கள் மற்றும் சில ஆங்கில ஊடகங்கள் அறிக்கைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இனவாத ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்,
இது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற பிரச்சினை அல்ல.
இது தேசிய பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வடக்கிலும், தெற்கிலும் இனவாதிகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், இனவாத செயற்பாடுகள் இடம்பெறாதிருக்க அமைச்சர் சாகல ரத்நாயக்க நடவடிக்கை எடுப்பார் என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில், முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்காதிருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியூதீன்,
அண்மையில் சில மதகுருமார்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாக குறிப்பிட்டார்.
சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெறுகின்றதாக அவர் கூட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க,
நாட்டின் அபிவிருத்திக்கு சமத்துவம் மிக அத்தியாவசியமாகும்.
சமத்துவம் மீள உறுதிப்படுத்தப்படு வருகின்ற நிலையில், அதனை பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த விரைவில் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, இனவாத ரீதியான சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் சபையில் வலியுறுத்தினார்.