இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து மான்செஸ்டர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் இயக்கத்தினர் அறிவித்தபோதும், போலீசார் தரப்பில் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தற்கொலைப்படை தீவிரவாதியை போலீசார் அறிவித்துள்ளனர்.
லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதே தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இவர் தனித்து செயல்பட்டாரா? அல்லது வேறு குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.