முகமாலையில் காவல்துறை நிலையத்தின் மீதோ அல்லது காவல்துறை வாகனத்தின் மீதோ துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முகமாலை பகுதியில் அண்மையில் காவற்துறை வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முடிவுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வினவினார்.
இதற்கு பதிலளித்தபோதே அமைச்சர் சாகல ரத்நாயக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.
காவற்துறை வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இது குறித்த விசாரணைகளை காவற்துறையின் ஐந்து குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.
விசாரணையின் முடிவில் அது தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, பிலியந்தலையில் காவற்துறை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய பாதாள உலக குழு தலைவர் ஒருவர் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறினார்.