யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது

259 0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மேலும் இருவர் தெரிவாகியுள்ளனர்.

குறித்த மூவரும் முதல் தடவையாக சர்வதேச மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளனர். இவர்கள் மூவரும் வெளிநாடு செல்லவிருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

தாய்லாந்தில் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இம் மூவருடன் மேலும் ஐவர் பங்குபற்றவுள்ளனர்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனிதா, 3.45 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டினார்.

சம்மட்டி எறிதல் வீராங்கனைகளான அயேஷா மதுவன்தி, பத்தம்ச ஆகியோரும் முதல் தடவையாக சர்வதேச ரீதியான போட்டிகளில் பங்குப்பற்றவுள்ளனர்.

இதேவேளை, காலிங்க குமாரகே, தனூக்க லியனபத்திரண (நீளம்­பாய்தல்), டி. எஸ். ரணசிங்க (ஈட்டி எறிதல்), விதூஷா லக்ஷானி (முப்பாய்ச்சல்), நிலானி ரத்நாயக்க (3,000 மீ. தடைதாண்டி ஓட்டம்) ஆகியோரும் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.