இன்று அதிகாலை கஹவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமாக்கப்பட்டமை, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனாவின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்
இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்குக் கூட்டத்திலேயே அமைச்சர் மனோ கணேசன் இந்த விடையங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
தனது அமைச்சுக்குள்ளோ அல்லது வேறு எங்கேயுமோ எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும், தன்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனது அமைச்சுக்குச் சிங்கமாக வந்த பொதுபல சேனை செயலாளர் ஞானசார தேரர் பூனையாகத் திரும்பி போனார். ஆனால், சாதாரண மக்களின் நிலைமை அதுவல்ல. அவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
2015ஆம் வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஆகிய கட்சிகளுக்கு நல்லாட்சிக்காக வாக்களித்த சிறுபான்மை மக்களை, எமது அரசாங்கத்திடமிருந்து பிரித்து, எதிர்வரும் தேர்தல் காலங்களில் வாக்களிக்காமல், அவர்களை வீட்டில் இருக்கச் செய்யும் திட்டமே இதுவாகும் எனவும் அவர் கூறினார்.
அமைச்சர் மனோ கணேசனின் கருத்துகளை அடுத்து, அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவுப் ஹக்கிம், துமிந்த திசாநாயக்க, சாகல ரத்னாயக்க ஆகியோரும் இது குறித்து அமைச்சரவையில் உரையாற்றியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடுமையான றையில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதையடுத்து இதுபற்றி பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க; சம்பவங்கள் நடைபெறும் பிரதேசங்களில் பொறுப்பில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளை நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூறவைக்கும் நடைமுறையை உடனடியாக அமுல் செய்யுமாறு, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.
தன்னை நேற்று முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் சந்தித்ததாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க அமைச்சரவைக்குத் தெரிவித்தார். அதையடுத்து இதை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல், சட்டம், ஒழுங்கு பொது பிரச்சினையாகப் பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி, அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு தெரிவித்துள்ளார்.