கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாட்டில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றினை முன்வைக்கவுள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தின் பொது செயலாளருக்கு முன்னறிவித்தல் கொடுத்துள்ளார்.
அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் தேசிய நல்லிணக்கத்தை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கும், நல்லிணக்கத்துக்குத் தடைகளை ஏற்படுத்தும் அடிப்படை வாத, இனவாத சக்திகளின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை பாராளுமன்றம் எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்குகின்றேன் என அவர் பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நிலையில் அரசியல் சுயலாபம் கருதி அடிப்படைவாதிகள் சிலர் தற்போது கட்டியெழுப்பப்பட்டு வரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக இனங்களுக்கிடையில் வெறுப்புணர்ச்சியை உருவாக்க முயல்கிறார்கள். இந்நிலைமை ஒரு போதும் எமது நாட்டிற்கு நன்மை பயக்காது எனத் தெரிவித்துள்ளார்.